பட்டப் பகலில் பம்மல் நாகல்கேனி பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் உயர்ந்த விலை  செல்போன் பறிப்பு. யூட்யூப் பார்த்து திருடியதாக வாக்குமூலம். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேனி பிரதான சாலையில் செளந்தர்யா என்ற பெண் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சௌந்தர்யாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினர். 



அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சௌந்தர்யா எழுந்து செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட நபர்களை பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளார். ஆனால் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.  உடனே இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து. தப்பி ஓடிய  நபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தநிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

காவல்துறை நடத்திய விசாரணையில் அவர்கள் பெயிண்டிங் வேலை செய்யும் குன்றத்தூரைச் சேர்ந்த டேனியல் (23), மடிப்பாக்கத்தை சேர்ந்த சகாயராஜ் (47), என்பது தெரியவந்தது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட டேனியலுக்கு சகாயராஜ் சித்தாப்பா ஆவார். இருவரும் ஒன்றாக மது குடிக்கும் பழக்கமுடையவர்கள். அப்படி இருவரும் நேற்று  சகாயராஜ் வீட்டில் மது அருந்திவிட்டு டேனியல் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.இருவரும் திருநீர்மலை சாலை, நாகல்கேணி அருகே சென்றபோது சௌந்தர்யா செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை டேனியல் கண்டுள்ளார்.


முன்னதாக யூ-ட்யூபில் செல்போன் குறித்து பார்த்திருந்த டேனியல், தனக்கு செல்போன் இல்லை என்ற ஏக்கத்தில் சௌந்தர்யாவிடம் இருந்த செல்போனைப் பறித்துள்ளார். இதுகுறித்து விவரம் அறியாத சகாயராஜ் டேனியல் செல்போன் பறித்ததை அறிந்துள்ளார். இதனையடுத்து இருவரும் செல்போனை திரும்பக்கொடுக்கச் சென்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் பயந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரையும் பிடித்து கைது செய்து அவர்களது வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.



சமீப காலமாகவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பம்மல், குரோம்பேட் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது . இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள் செயின் பறிப்பு செல்போன் திருட்டு ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் காவல்துறையினர், தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.