தேனி அருகே உள்ள அம்மச்சியாபுரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கொரோனா வைரசுக்கு கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் 2-வது அலையாக உருவெடுத்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 3-வது அலையும் வரப் போவதாக எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இதனால், கொரோனா என்றாலே மக்களிடம் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.



கொரோனா மீதான பயம் ஒரு புறம் இருக்க சமீபத்தில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் கொரோனா 'தேவி' சிலை வைத்து வழிபாடு நடந்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.  இந்த நிலையில், தேனி அருகே  அம்மச்சியாபுரம் என்ற கிராமம் உள்ளது.  இங்கு யாரைக் கேட்டாலும் தெரிகின்ற அளவிற்கு புகழ் கொண்டவர், 90 வயதாகும் ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி ராஜரத்தினம். இவர் தற்போது பணி ஓய்வு பெற்று விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் கொரோனாவுக்கு கோயில் கட்டும்  பணியை தொடங்கி உள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



அம்மச்சியாபுரத்தில் இருந்து குன்னூர் செல்லும்  சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் கொரோனா கோயில் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு, கம்புகள் நடப்பட்டு, அதில் வேப்பிலை கட்டப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் ஒரு நிமிடமாவது அதனை பார்த்து செல்கின்றனர்.


இது குறித்து கொரோனா கோயில் கட்டப்போகும் ராஜரத்தினம் கூறுகையில், "நான் மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது விவசாயம் செய்து வருகிறேன். கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துள்ளது. கண்ணுக்கு தெரியாத அந்த வைரஸ் உலகில் பல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனாவுக்கு ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன்.



        முந்தைய காலத்தில் அம்மைநோய் தாக்கம் அதிக அளவில் இருந்தபோது, அது வழிபாடாக மாறியது.  மக்கள் மாரியம்மனை வழிப்பட்டார்கள். இதே போல்தான் கொரோனாவையும் பார்க்கிறேன். அதனால் கோயில் கட்ட முடிவு செய்தேன். விரைவில் மேடை வடிவில் கோயில் கட்ட உள்ளேன். பூஜை, வழிபாடு எல்லாம் கிடையாது. இந்த வழியாக கடந்து செல்பவர்கள் கொரோனா கோயிலை பார்த்து கும்பிட்டு செல்லட்டும். மேலும் கொரோனாவினால் இறந்தவர்களுக்கு ஒரு நினைவிடம் போல இந்த கோவில்.   பாதுகாப்பான சூழலில் மக்கள் வாழட்டும் என்பதற்காக இதை கட்டுகிறேன் " என்றார்.


மேலும் பார்க்க,


கோலப்பொடியில் ஓவியம் வரையும் ஆசிரியர்,


தேனி | டிஜிட்டக் ஓவியமா? கோலமா? - பல ஊர்களில் சேகரித்த மண்ணால் ரியாலிஸ்டிக் உருவங்கள் படைக்கும் ஆசிரியர்..!