கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளத்தின் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி கொத்தனார் உயிரிழந்தார். இதுதொடர்பாக லாலாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (40). கொத்தனாரான இவர் மீன்பிடித் தொழிலும் செய்து வருகிறார்.
இந்நிலையில், தொட்டியபட்டியில் உள்ள குளத்தில் மீன் பிடிப்பதற்காக நேற்று வலையை வைத்துள்ளார். இன்று அதிகாலை வலையை எடுப்பதற்காக குளத்திற்கு சென்றுள்ளார். மீன்பிடி வலையை எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
காலை அக்குளத்தின் வழியாக வந்த பொதுமக்கள் சிவசுப்பிரமணியன் நீரில் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து, லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாலாபேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகே மீன் பிடிப்பதற்காக சென்று குளத்தின் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி கொத்தனார் சிவசுப்பிரமணியன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் மீன்பிடிப்பதற்காக சென்று சேற்றில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்