பைக் சவாரிக்கு புக் செய்த பயணித்த பெண்ணிடம் ஓட்டுநர் தவறாக நடந்துகொள்ள முயன்ற நிலையில், ஓடும் பைக்கில் இருந்து இளம்பெண் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல செயலியில் புக்கிங்


கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 11 மணியளவில் பிரபல பைக் டாக்ஸி சவாரி செயலியில் பைக் சவாரிக்கு முன்பதிவு செய்துள்ளார்.


பெங்களூரு, எலஹங்கா பகுதியில் வசித்து வந்த இந்தப் பெண், இந்திரா நகரில் உள்ள தன் தோழி வீட்டுக்குச் செல்வதற்கான பைக் சவாரிக்கு புக் செய்துள்ளார்.


இந்நிலையில் சவாரிக்கு வந்த ஓட்டுநர் அந்தப் பெண்ணை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருக்கையில் ஓடிபியை சரி பார்க்க வேண்டும் எனக் கூறி அவரது செல்ஃபோனைப்  பறித்துக் கொண்டு திருப்பித் தராமல் இருந்துள்ளார்.


ஓடும் வண்டியில் இருந்து குதித்த பெண்


தொடர்ந்து ஓட்டுநர் எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கிய நிலையில், வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு தொட முயற்சித்ததாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், பதறிப்போன இளம்பெண், செய்வதறியாது எலஹங்கா பகுதியில் உள்ள அப்ரார் பிஎம்எஸ் கல்லூரி அருகே வேகமாகச் சென்ற பைக்கில் இருந்து குதித்துள்ளார். தொடர்ந்து அந்தக் கல்லூரியின் காவலாளி விரைந்து வந்து அந்தப் பெண்ணுக்கு உதவ, பைக் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


பைக்கில் இருந்து குதித்ததில் இளம்பெண்ணுக்கு அடிபட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பிய அப்பெண் முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இந்நிலையில், இளம்பெண் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த 27 வயதான தீபக் ராவ் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார்.


 






பெங்களூருவின் திண்ட்லு பகிதியில் தங்கியிருந்து இந்நபர் பைக் ஓட்டுநராக பிரபல சவாரி செயலிக்கு பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அந்நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் இளம்பெண் பதறியடித்து குதித்த இந்த வீடியோ இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.