Nellai Student Suicide: நெல்லையில் தனியார் பள்ளி மாணவன் மரணத்திற்கு நீதி கோரி, குடும்பத்தினர் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாணவன் தற்கொலை:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் திட்டி பெற்றோரை அழைத்து வர சொன்னதன் காரணமாக மாணவன் பூச்சி மருந்து அருந்தியதாகவும், காலை நேர வழிபாட்டின் போது மயங்கி விழுந்து மாணவன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயிரிழந்த மாணவனின் சடலத்துடன் குடும்பத்தினர் காவல்நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அதோடு, மாணவன் பயின்ற பள்ளிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளையும் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

மானாபரநல்லூரைச் சேர்ந்த மாணவன் சபரி வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அவரை பள்ளி நிர்வாகியும் வகுப்பு ஆசிரியரும்  கடும் சொற்களால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சபரி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும் உயிரிழந்துள்ளார். 
 இதையடுத்து மாணவனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி வீரவநல்லூர் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியும் அளித்துள்ளனர். இதனிடையே, அங்கு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, தீ வைத்தவர்களை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், பயின்று வந்த ஸ்ரீமதி எனும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த பள்ளி வளாகமும் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.