மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு காவல் சரகத்துக்கு உள்பட்ட மேலமருதாந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அந்துவான் என்பவரின் மனைவி 33 வயதான காயத்ரி. இவர் தனது குழந்தையை அழைப்பதற்காக அதே பகுதியில் உள்ள தந்தை கிருஷ்ணசாமி வீட்டிற்கு கடந்த மாதம் 14 -ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது குடும்பத் தகராறு முன்விரோதம் காரணமாக காயத்ரியை பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது சித்தப்பா சிவசுப்பிரமணியனின் மனைவி ராமலட்சுமி என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனை காயத்ரி தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட ராமலட்சுமியின் மகன்கள் ஹரி ராஜ்துரை, நவீன் ராஜ்துரை ஆகிய இருவரும் காயத்ரியை தங்கள் வீட்டிற்குள் இழுத்துச்சென்று தாக்கி, அவரது உடையை கிழித்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காயத்ரி மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், மணல்மேடு காவல்துறையினர் இதுநாள்வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காயத்ரி, மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்று, அங்கு தனது உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் மீட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து, மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், காயத்ரியை இது தொடர்பாக விசாரணைக்காக மணல்மேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறையில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 22 பேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு நாகை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பரிந்துரையின் பேரில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளிகளான 23 வயதான திவாகர், 19 வயதான ரஞ்சித் 25 வயதான சந்துரு, 24 வயதான அஜித்குமார் மற்றும் 20 வயதான ஹரிஷ் உள்ளிட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் ஒராண்டு சிறையில் அடைக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை அடுத்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறையினர் நாகை சிறைக்கு சென்று அங்கு அடைக்கப்பட்டு இருந்த 5 பேரையும் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்று சிறை கண்காணிப்பாளரிடம் உத்தரவு நகலை ஒப்படைத்தனர். இதனை அடுத்து அவர்கள் 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற