தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் நெருங்கிய நண்பரின் மகள் அனே நேற்று (அக்டோபர் 8) உயிரிழந்தது குறித்து வருத்தமுடன் பதிவிட்டுள்ளார்.
நண்பரின் மகள் உயிரிழப்பு
தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் தற்போது இந்தியாவில் நடந்து வரும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறார். ராஞ்சியில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, மில்லர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது மரணம் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டேவிட் மில்லர் அவரோடு கழித்த சில பொன்னான தருணங்களின் புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டார். அனே, சில சந்தர்ப்பங்களில், மைதானங்களிலும் அவரோடு இருப்பார், அந்த புகைப்படங்களும் வீடியோவில் இடம்பெற்றது. வீடியோவில், மில்லர் அவரை போட்டிகளுக்குப் பிறகு மைதானங்களுக்குள்ளும் அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டதை காணமுடிகிறது. மில்லரின் மகள் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், அவர் அவரது நெருங்கிய நண்பரின் மகள் என்பது தற்போதுதான் பலருக்கும் தெரிய வந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
"உன்னை மிகவும் மிஸ் செய்ய போகிறேன்! எனக்கு தெரிந்ததிலேயே நல்ல மனம் கொண்டவர். எப்போதும் நம்பமுடியாத அளவுக்கு உன் முகத்தில் புன்னகையும், பாசிட்டிவ் எனர்ஜியும் இருக்கும். அதே நேரத்தில் உனக்கு ஒரு குறும்புத்தனமான பக்கமும் உண்டு. உன் பயணத்தில் எவ்வளவு சவால்கள் இருந்தாலும், நீ ஒவ்வொரு நபரையும் அரவணைத்துச் செல்கிறாய்.
கலங்க வைக்கும் பதிவு
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீதான் எனக்கு நிறைய கற்றுத் தந்தாய். உன்னுடன் ஒரு பயணத்தில் நடந்ததை நான் உணர்கிறேன். ஐ லவ் யூ சோ மச்! RIP, "என்று மில்லர் தனது ஸ்டோரியில் எழுதினார். இவரது பதிவும், ஸ்டோரியும் ரசிகர்களை கண்கலங்க வைத்தது.
இந்தியா உடனான தொடர்
இந்த நிலையில் ராஞ்சியில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டிக்கு மில்லர் தயாராகி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டிக்கு ராஞ்சியில் மில்லர் உள்ளிட்ட தென்னாப்பிரிக்கா அணி தற்போது தயாராகி வருகிறது.
இந்த ஆட்டம் இன்று (அக்டோபர் 9) மதியம் தொடங்க உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மில்லர் தனது இரண்டாவது டி20 சதத்தையும் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், முதல் ஒருநாள் போட்டியிலும் அற்புதமான அரை சாதம் விளாசி, அவரது ஃபார்மை தொடர்ந்தார். மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 249 ரன்கள் எடுத்தது. இறுதியில் சஞ்சு சாம்சன் அடித்து ஆடினாலும் தென் ஆப்பிரிக்க அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது.