மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை ஒழிப்பதற்கு மாவட்ட காவல் துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது செய்தும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தும், சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.



அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கம் செய்யப்பட்டும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் மதுரை எழுமலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மானூத்து முனியாண்டி கோயில் மொட்டைபாறை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து எழுமலை காவல்துறையினரின் சோதனையில், ஆந்திராவில் இருந்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து  விற்பனை செய்து வந்த மானூத்து பகுதியை சேர்ந்த  பவுன்தாய்(56), வடக்குத் தெருவை சேர்ந்த பிராபாவதி (எ) பேச்சியம்மாள்(34), பேச்சியம்மாள்(45) ஆகிய 3 பெண்களை கைது செய்து சுமார் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.