திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் உப்பிலியபுரம் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தளுகை ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ஜவ்வரிசி தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உணவு பொருள் தயாரிக்க, தடை செய்யப்பட்ட இரசாயனம் ஹைப்போ சொலூசன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு சுமார் 3725 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கு தயார் செய்யப்பட்டு, பொட்டலமிடப்பட்ட ஜவ்வரிசி 5445 கிலோ உணவு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி பிணைபத்திரம் பெறப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் மற்றும் உணவு பொருள்களை தொழிற்சாலையிலேயே உள்ள கிடங்கில் வைத்து சீலிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட தொழிற்சாலையில் வெளியேறும் இரசாயனக் கழிவுகள் அருகில் உள்ள வாய்க்காலில் கலப்பதை முன்னிட்டு மேல் நடவடிக்கைக்காக மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியபடுத்தும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு கோப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 



 

மேலும் தொழிற்சாலையில் சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006ன் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து புகார் அளிக்க விரும்பினால் 9944959595, 9585959595 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அவ்வாறு புகார் அளிக்கும் பொதுமக்களின் விபரம் ரகசியம் காக்கப்பட்டு அந்த கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் உணவு நிறுவனங்கள், அரிசி  உள்ளிட்ட உணவு தானிய குடோன்கள் தரமான பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்யவேண்டும். தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யபடுவதாக புகார்கள் வந்தால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த மாதிரியான அதிரடி சோதனைகள் தொடரும் என தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.