கொரோனா நோய் தொற்று தற்போது தமிழகத்தில் குறைந்துவருகிறது. இதனால் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். நாளை (7ஆம் தேதி) காலை 6 மணியுடன் தளர்வுகள் அற்ற ஊரடங்கு முடியவிருந்த நிலையில் வரும் 14-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில கடைகள் மட்டும் திறக்கப்பட உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், குடிமகன்கள் மது கிடைக்காமல் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது. மதுவுக்காக பலரும் சொந்தமாக சாராயம் காய்ச்சி, போலீஸிடம் வசமாக சிக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் காமாட்சிபேட்டை, நத்தம், திருவாரூர் உள்ளிட்ட பகுதியில் சிலர் கேஸ் ஸ்டவுல் குக்கரில் வைத்து சாராயம் காய்ச்சியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிலர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். இதனடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்த போது பல்வேறு மூலிகை பொருட்கள் மற்றும் வேதிப் பொருட்கள் மூலம் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் சாராயம் காய்ச்சிய நபர்களை கைது செய்தும் அவர்கள் வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதுகுறித்து கடலூர் காவல்துறையினர்,” குறிப்பிட்ட பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் வந்தது. ஏரியாக்குள் நுழைந்ததுமே சாராய வாசனை மூக்கை துளைத்தது. அதனை தொடர்ந்து நெருங்கிச் சென்று பார்க்கையில் 5 நபர்கள் சுற்றி உட்கார்ந்து கொண்டு ”இதை போட வேண்டும். அதனை தான் முதலில் போட வேண்டும்” என சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். வசமாக சிக்கிய அவர்களிடம் இருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து, கைது செய்தோம். வீடியோக்களை பார்த்து இவ்வாறான முயற்சிகளை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது” என்றனர்.
பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிவருவது குறித்து மனநல ஆலோசகர் மற்றும் உளசிகிச்சையளர் ப.இராஜ செளந்தர பாண்டியனிடம் கேட்ட போது, " மது பழக்கத்தில் சிக்கியுள்ள நபர்களுக்கு இந்த ஊரடங்கு நல்ல வாய்ப்பு. இந்த சமயங்களில் மதுப்பழக்கத்தில் வெளிவந்துவிடலாம். மது ஆசையை சிறிதும் கட்டுப்படுத்த முடியாத நபர்கள் தான் இது போன்ற விசயங்களில் ஈடுபடுகின்றனர். இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம். கொரோனா முதல் அலையில் பலரும் மதுப் பழக்கத்திலிருந்து மீண்டனர். ஆனால் அதனை தொடர்ந்து கடைபிடிக்காமல் மீண்டும் போதைக்கு அடிமையாகின்றனர். எனவே இது போன்ற சமயங்களில் அரசு ஹெல்ப் லைன் நம்பர்களை உருவாக்கி அவர்களை மீட்க தனி அறை அமைத்து ஆலோசனை வழங்கவேண்டும். மருத்துவர் ஆலோசனையோடு மருந்துகள் எடுத்துக் கொண்டால் மதுவில் மீண்டுவர அதிக வாய்ப்பு உள்ளது" என்றார்.
இத மிஸ் பண்ணாதீங்க பாஸ் -ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!