தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு வயது 43. இவர் துபாய் நாட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர். தன்னுடைய 23 வயதில் துபாய் சென்ற அவர் கடந்த 20 ஆண்டுகளாக துபாயிலே ஓட்டுனராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்ப ரவிக்குமார் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, துபாயில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதேபோல, 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு திரும்பிய ரவிக்குமாரை ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது ஆவணங்களை சோதனை செய்த அதிகரிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ரவிக்குமார் மீது தேடப்படும் குற்றவாளி என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட காவல்துறையால் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைச் சுற்றிவளைத்து அதிகாரிகள் அவரை பிடித்தனர். ரவிக்குமார் தன்னுடைய இளமைப் பருவத்தில் தஞ்சை பகுதியில் சிறு சிறு திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ரவிக்குமார் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரவிக்குமார் பிடிபட்ட தகவலை விமான நிலைய அதிகாரிகள் தஞ்சை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்திற்கு நேரில் வந்து ரவிக்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி துபாயில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய போது போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, கடந்த 2020ம் ஆண்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அரியலூரைச் சேர்ந்த புலித்தேவன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். ஜாமீனில் வெளிவந்த அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்து வந்தார்.
சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் புலித்தேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த புலித்தேவன் அரியலூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து, புலித்தேவனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் படிக்க : பாலியல் வன்கொடுமையா? சோனாலி போகாட் மரணத்தில் திடீர் திருப்பம் : உறவினர்கள் போலீஸில் புகார்!
மேலும் படிக்க : Driving License : இனிமே லைசென்ஸ் இல்லன்னா, இதெல்லாம் உங்களுக்குக் கிடையாது.. அதிரடி காட்டிய நீதிமன்றம்..