வாகனங்களை இன்சூரன்ஸ்  செய்யும்போது  உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என பார்க்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு  தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னையில் உள்ள தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்பவர், கடந்த 2019 ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, சகோதரர் திலீப்குமாருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.திருவள்ளூரை அடுத்த சென்னேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தினேஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி தினேஷ்குமாரின் பெற்றோர்  சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 



 

இந்த வழக்கை விசாரித்த சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் நீதிபதி சந்திரசேகரன், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்றாலும்,  மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன்  அடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


 




மற்றொரு வழக்கு

 

மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்!




 

மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மனநல பாதிக்கப்பட்டவரான பென்டிங் ஜான் என்பவரை 2014 ஜூன் 22ம் தேதி காவல்துறையினர் வீடு புகுந்து தாக்கி நித்திரவிளை காவல் நிலையதிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பெண்டிங் ஜான் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூன் 27 ம் தேதி உயிரிழந்தார்.

 

கணவரின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு உரிய நீதி கிடைக்க உத்தரவிட வேண்டுமென மாநில மனித உரிமை அணையத்தில் அவரது மனைவி சுவர்ணா பாய் புகார் அளித்திருந்தார். இதை விசாரித்த ஆணைய உறுப்பினரான சித்தரஞ்சன் மோகன்தாஸ், காவல்துறை என்பது பலத்தையும் அதிகாரத்தையும் முன்னிலைபடுத்தும் நபர்களாகவே பொதுமக்களுக்கு தெரிவதாக குறிப்பிட்டுள்ள அவர், குற்றம்சாட்டப்பட்ட நபர் நிரபராதி அல்லது குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் என்று கருதும் விதத்தில் நடத்தப்பட வேண்டுமென்ற மனநிலை அனைத்து காவல்துறையினரின் மனதில் கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அணுகுமுறை காவல்துறையின் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

சட்டத்தைக் காப்பவர்கள் தேவையற்றவர்களாக காணப்படுவது கவலை அளிப்பதாகவும், காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதில் மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து காவல்துறைக்கு முறையான பயிற்சி அளிக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார். மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், அவர்களை கண்டறியும் வகையிலும், அவர்கள் பயப்படாதா வகையிலும் செயல்பட காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

 

மேலும், உயிரிழந்த பென்டிங் ஜான் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய்  இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.