ஹரியானா பாஜக தலைவர் சோனாலி போகாட்டின் மரணத்தில் மற்றொரு திருப்பமாக அவரது உறவினர்கள் காவல்துறையில் தற்போது புகார் அளித்துள்ளனர். இதன்படி சோனாலி போகட்டின் சகோதரர் ரிங்கு டாக்கா கோவா காவல்துறையில் புகார் அளித்துள்ளார், அவரது சகோதரியை அவரது தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் ஆகியோர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொலை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


புகாரில், பாஜக தலைவரான சோனாலி ஆகஸ்ட் 23ம் தேதி இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது தாய், சகோதரி மற்றும் மைத்துனரிடம் பேசியதாக ரிங்கு குறிப்பிட்டுள்ளார். 




சோனாலியின் சாப்பாட்டில் போதைப்பொருள் சேர்த்த பிறகு, அவரை பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தியதாக ரிங்கு சங்வான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.


சங்வான் தனக்கு போதைப்பொருள் கலந்த உணவைக் கொடுத்ததாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததாகவும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கப் போவதாக மிரட்டுவதாகவும் அவர் (சோனாலி) கூறியதாக காவல்துறை புகாரின் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சோனாலியின் அரசியல் மற்றும் நடிப்பு வாழ்க்கையை அழித்து விடுவதாக சங்வான் மிரட்டியதாகவும், அவரது தொலைபேசிகள், சொத்து பதிவுகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் வீட்டு சாவிகளை கைப்பற்றியதாகவும் புகார்தாரரான அவரது சகோதரர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய சோனாலியின் உறவினர் மொனிந்தர் போகட், "எங்கள் சகோதரி பாலியல் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரிகிறது” என்றார்.







ஹரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த பாஜக தலைவர் சோனாலி, செவ்வாய்க்கிழமை காலை வடக்கு கோவாவில் உள்ள அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். முதற்கட்ட அறிக்கைகள் அவர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறினாலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அது கொலை எனச் சந்தேகிக்கின்றனர்.


கோவாவில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் சோனாலியின் குடும்ப உறுப்பினர்கள் திருப்தி அடையவில்லை. சோனாலியின் சகோதரர் ரிங்கு டாக்கா, புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று கூறினார்.