கடந்த ஜூலை 26ஆம் தேதி கர்நாடகாவின் தக்சின கன்னடா மாவட்டத்தில் பெல்லாரே என்ற இடத்தில் பாஜக இளைஞர் அணித் தலைவர் பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்கள், பெல்லாரேவை சேர்ந்த முகமது ஷபிக், 27, மற்றும் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள சவனூரைச் சேர்ந்த ஜாகிர், 29, என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜாகீருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 


சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி அலோக் குமார் இதுகுறித்து கூறுகையில், "அனைத்து கோணங்களிலும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் நோக்கங்களையும் நாங்கள் விசாரித்து வருகிறோம். இருவரும் நேற்று விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு மேலும் பலர் கைது செய்யப்படலாம்" என்றார்.


முன்னதாக பாஜக இளைஞரணி மாவட்டச் செயலர் பிரவீன் நெட்டாரு, செவ்வாய்கிழமை இரவு பெல்லாரேயில் உள்ள கோழிக்கடையை மூடிவிட்டு, அருகிலுள்ள சுல்லியாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் வந்த மூன்று பேரால் கொல்லப்பட்டார்.


கர்நாடக பாஜக அரசே சொந்த கட்சியினரை பாதுகாக்க தவறிவிட்டதாக பாஜக இளைஞர் அணியினர் கூறியதையடுத்து போராட்டம் வெடித்தது. மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீலின் காரை சுற்றி வளைத்த பாஜக இளைஞரணியினர் அவரை நகர முடியாத அளவுக்கு செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


விரைந்து விசாரணை நடத்தப்படும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதியளித்ததையடுத்து, ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டன. 15 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் நேற்று தெரிவித்தனர். பைக்கில் கேரள பதிவு எண் இருந்ததால், மூன்று குழுக்கள் கர்நாடகாவில் உள்ள பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.


பெல்லாரே மற்றும் சுல்லியாவில், கடையடைப்புக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்ததையடுத்து, போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. கொலை செய்யப்பட்ட பாஜக இளைஞரணி நிர்வாகியின் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 


இந்தக் கொலைக்குப் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவும் இருப்பதாக சில வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண