தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2.15 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை ஏ.வி.பி.அழகம்மாள் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதாராஜ் (31). கடந்த 21ம் தேதி அனிதாராஜ் வீட்டை பூட்டி விட்டு புதுக்கோட்டைக்கு சென்றார். பின்னர் 22ம் தேதி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 
உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2.15 லட்சம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து அனிதாராஜ் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




முதியவர் தற்கொலை: தஞ்சையில் உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை அடுத்த ராவுசாப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (63).  இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 22ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து கோவிந்தராஜின் மகன் வினோத் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் காரைக்கால் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சிவமகா(வயது16). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரை பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு அவரது தாயாரும், சகோதரியும் நேற்று முன்தினம் மதியம் திரைப்படம் பார்ப்பதற்காக கும்பகோணம் சென்று விட்டனர். இதனால் மனமுடைந்த சிவமகா தனது வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.