திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள ஐ.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் நேதாஜி. பாய்லர் ஆலையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று உள்ளார். இவர் தம்பி தேவேந்திரன் என்பவருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். தொழிலதிபர்களான இவர்களுக்கு 6 கிரசர்கள் மற்றும் தனியார் பஸ்கள் உள்ளன. மேலும் ஒப்பந்த அடிப்படையில் சாலை உள்ளிட்ட பணிகளை எடுத்து செய்து கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை தேவேந்திரனின் இரண்டாவது மகன் பாலாஜி என்பவருக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தொழிலதிபர் ஒருவரது மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் குடும்பத்தினர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்று விட்டனர். நேற்று மாலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் சென்றுபார்த்தபோது, வீட்டில் இருந்த 10-க்கும் மேற்பட்ட அலமாரிகள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பூஜை அறையில் இருந்த அலமாரிகளும் உடைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்த 150 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.




மேலும் இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், இன்ஸ்பெக்டர்கள் சந்திர மோகன், கமலவேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் அச்சுதானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் லிலி சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு திருவெறும்பூர் கல்லணை சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற வீட்டில் ஆய்வு செய்தனர். பின்னர் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறியது... முதல்கட்ட விசாரணையில் 150 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இந்தகொள்ளை கும்பலை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது,தான் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி ரோந்து பணியில் ஈடுபட முடியும் என தெரிவித்தார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.