மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த காளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகள் 23 வயதான பவித்ரா. பட்டதாரி பெண்ணான பவித்ராவிற்கும், சீர்காழி தாலுக்கா திட்டை கிராமம் சிவனார்விளாகம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ஆனஸ்ட்ராஜ் என்கிற ரஞ்சித் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர்களால் முடிவு செய்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. திருமணத்தின் போது 16 சவரன் நகை, புல்லட் பைக் மற்றும் 70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை சீதனமாக கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.




இந்நிலையில், திருமணம் ஆனதற்கு பிறகு பவித்ராவை கணவர் ரஞ்சித் மற்றும் உறவினர்கள் பல்வேறு முறையில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும், கணவரின் உறவினரான மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியாவை திருமணத்திற்கு முன்பே ரஞ்சித் காதலித்து வந்ததாகவும், தற்போது அவருடன் தொடர்பிலிருந்து கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் திருமணமாகி இரண்டு மாதத்திலேயே, தாலியை அறுத்துவிட்டு அடித்து துன்புறுத்தி தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும்,




மேலும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் அரசு வேலை வாங்கித் தர வேண்டும், மாடி வீடு கட்டி தர வேண்டும் என வரதட்சணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி கணவர் ரஞ்சித் மீது கடந்த ஜனவரி 14 -ம் தேதி அன்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பவித்ரா புகார் கொடுத்துள்ளார். இதை கேள்விப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பவித்ராவையும் அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் மூலம் மிரட்டி வருவதாகவும்,





மேலும், காவல்துறையினர் என்னை மட்டும் விசாரித்து என் மீது நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்வதா கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் வந்து மனு அளித்துள்ளார். கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி இளம் பெண் பொதுமக்கள் மற்றும் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.




நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஐந்தாண்டு உயர்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு தேர்வினை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 288 பேர் எழுதினர்.


நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஹெச்.சி.எல். நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவரும், மென்பொருள் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மாணவ மாணவிகளுக்கு 12 மாத திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பையும், ஐந்து வருட உயர்கல்வியையும் எச்.சி.எல் நிறுவனத்தினர் வழங்க உள்ளனர். இதற்கான மாணவ - மாணவியர் தேர்வு மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.




இத்தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு, 5 ஆண்டு இலவச உயர்கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பை பெறும் வகையில், அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவின் பேரில் ஏற்கனவே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவிகள் 288 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் அவர்கள் நேரடியாக இந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவார்கள். ஹெச்சிஎல் அலுவலக அதிகாரிகள் நடத்திய இத்தேர்வினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல் கண்காணித்தார்.