மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பொதுமக்கள் பயன்படுத்திய கிணற்று புறம்போக்கை தனிநபர் பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்து மீண்டும் கிணற்றை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
கிணறு ஊரணி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சார் பதிவகம் சீர்காழி தாலுக்கா எடமணல் கிராமத்தில் உள்ள புல எண் 176/1 என்பது அரசு புறம்போக்கு சொத்து மற்றும் நீர் நிலையாகும். 'அ' பதிவேட்டில் இது கிணறு ஊரணி என்று பதியப்பட்டுள்ளது. இந்த கிணறு ஊரணி ஊர் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கிணறு ஆகும். இந்த நீர்நிலை புறம்போக்கு தெருவை ஒட்டி உள்ளது.
பத்திரப்பதிவு
இந்நிலையில் அந்த கிணற்றை மூடி ராமமூர்த்தி மனைவி மல்லிகா என்பவர் அதன் மீது ஒரு குடிசை வீடு கட்டி உபயோகப்படுத்தி வந்துள்ளார். அதற்கு தவறான முறையில் மின்சார இணைப்பும் பெற்றுள்ளார். கிணற்று புறம்போக்கில் வடக்கில் செந்தில்நாதன் என்பவருக்கு புல எண் 176/2A1 என்ற எண்ணில் சொத்து உள்ளது. செந்தில்நாதன் இறந்துவிட்ட நிலையில் செந்தில்நாதனின் வாரிசுகளான மனைவி விஜயலட்சுமி மகன் ஆனந்தன் மகள் பிரகல்பா ஸ்ரீ மற்றும் தாயார் ராஜேஸ்வரி ஆகியோர் புல எண் 176/2A1 என்ற சொத்தை எடமணல் ஆம பள்ளம் கதவிளக்கம் எண் 329/a என்ற விலாசத்தில் வசிக்கும் ராமமூர்த்தி மனைவி மல்லிகா என்பவருக்கு 14.03.2025 தேதியில் ஆவண எண் 1044/2025 கிரைய பத்திரம் மூலம் கிரையம் கொடுத்துள்ளார்கள்.
உடந்தையாக அரசு அதிகாரிகள்
ஆனால், அப்படி கிரயம் கொடுக்கும் போது அரசு புறம்போக்கு புல எண் 176/1 ல் உள்ள குடிசையையும் சேர்த்து விற்றுள்ளார்கள். ஆனால் குடிசை கிணற்றின் மீது புறம்போக்கில் உள்ளதை மறைத்து புல எண் 176/2a1 ல் உள்ளது போல் தவறாக குறிப்பிட்டு சட்டவிரோதமாக விற்றுள்ளார்கள், மல்லிகாவும் அதை சட்டவிரோதமாக வாங்கியுள்ளார். இதற்கு சீர்காழி சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த விபரம் தற்போது தான் தெரிய வந்ததுள்ளது.
பொதுமக்கள் புகார் மனு
நீர்நிலை சம்பந்தமான கிரயம் செல்லாது என்பதால் ஒண்ணாவது நபர் கிரைய பத்திரத்தை ரத்து செய்து, அரசு நீர் நிலையை பாதுகாக்க வேண்டி 1,2 வது நபர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி சொத்தை அரசாங்கம் சார்பாக மீட்டு எடுத்து பழையபடி அங்கு ஊர் பொது கிணற்றை மீட்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக எடமணல் கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்கக்கூடாது என்றும், இதுவே தடங்கல் மனுவாக ஏற்று, அதேபோல் நீர்வள ஆதாரமான கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ள மல்லிகாவின் சொத்து வரி உட்பட எந்த வரியும் வகையறாக்களும் கொடுக்கக் கூடாது என்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், சீர்காழி வட்டாட்சியர், மாவட்ட பதிவு துறை உள்ளிட்டவர்களுக்கு மனு அளித்துள்ளனர்.
அதேபோல கிணற்று ஊரணி பகுதியினை ஆக்கிரமித்து வீடு கட்டி அதில் மின் இணைப்பு பெற்றுள்ளது மேற்படி செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் மின் பகிர்மான கழகம் அதிகாரிகள் ஆய்வு செய்து மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க உத்திரவிட வேண்டும் எனவும் புகார் மனு அளித்துள்ளனர்.