2010ஆம் ஆண்டு இந்தியாவில் பங்குச்சந்தையில் பங்குகள் விற்க வாங்க உதவுவதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம் ஸிரோதா. இந்த நிறுவனத்தை காமத் சகோதரர்கள் தொடங்கினர். நிகில் மற்றும் நிதின் காமத் சகோதரர்கள் இந்த நிறுவனத்தை தொடங்கினர். இணையதள பங்குச்சந்தை ப்ரோக்கர் என்ற முறையில் இந்நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக நிறுவனத்தின் மதிப்பும் அதிகரித்தது. தற்போது இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1100 கோடி ரூபாய்க்கு மேலாக உள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் இயக்குநர் சீமா பாட்டீல் ஆகியோருக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவருக்கும் மாதம் ஊதியம் 4.7 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதர சலுகைகளை சேர்க்கும் போது ஒருவருக்கு ஆண்டு ஊதியம் 100 கோடி ரூபாய் ஆக வருகிறது. இதன்மூலம் 300 கோடி ரூபாய் இந்த மூவரின் சம்பளத்திற்கு மட்டும் செலவிடப்படும். இந்த முடிவு தொடர்பாக நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தவுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு அமலுக்கு வந்தால் இந்தியாவில் அதிக ஆண்டு ஊதியம் பெரும் நிறுவனர்கள் என்ற பெருமையை நிதின், நிகில் ஆகியோர் பெறவுள்ளனர். இதற்கு முன்பாக இந்தியாவில் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் ஆண்டு ஊதியமாக 87.5 கோடி ரூபாய் பெற்று வருவதே அதிகமாக உள்ளது. அவருக்கு பிறகு ஹீரோ மோட்டர் கார்ப் குழுமத்தின் தலைவர் பவன் முன்ஜல் 84.6 கோடி ரூபாய் மாத ஊதியமாக பெற்று வருகிறார். இந்த இருவரையும் பின்னுக்கு தள்ளி நிதின்,நிகில் சகோதரர்கள் முதலிடம் பிடிப்பார்கள்.
இந்தியாவின் நம்பர் பங்குச்சந்தை ப்ரோக்கர் நிறுவனமாக ஸிரோதா தற்போது உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் 1000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது. அத்துடன் 422 கோடி ரூபாய் லாபத்தையும் ஈட்டியது. மேலும் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து தனது பங்குகளை திரும்பி வாங்கவும் திட்டமிட்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்தில் இப்படிப்பட்ட பெரிய நிறுவனத்தை உருவாக்கிய நிதின் மற்றும் நிகில் சகோதரர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தன்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்பாக நிகில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருந்தார். அதில், "எங்களுக்கு தற்போது அதிக பணம் தேவையில்லை. அதனால் ஒருவர் பணம் கொடுத்த வாங்க நினைத்தாலும் நாங்கள் எங்களுடைய பங்குகளை விற்கபோவதில்லை. எங்களுடைய நிறுவனத்திற்கு தற்போது எந்தவித கடனும் இல்லை. மேலும் நாங்கள் தேவையில்லாமல் விளம்பரம் செய்யப்போவதுமில்லை. இதனால் எங்களுக்கு பணம் தேவையில்லை. வளர்ச்சி என்பது நம்மை சுற்றி உள்ள கட்டுமானங்களின் திறனை அதிகரிக்கும் முறையில் இருக்க வேண்டும். அது பணத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது"எனத் தெரிவித்துள்ளார்.
வருமான வரி தாக்கல் நீட்டிப்பு: உங்கள் சந்தேகங்களுக்கு இதோ பதில்!