ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார ஆண்டு மார்ச் மாதம்31ஆம் தேதி முடிந்தவுடன்,அந்தக் காலத்திற்கான வருமான வரியை ஜூலை 31ஆம் தேதிக்குள் மக்கள் தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யவில்லை என்றால் அதற்கு பின் அபராதத்துடன் தாக்கல் செய்யவேண்டும். தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் காரணத்தால் மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டியுள்ளது.
இந்தச் சூழலில் அது தொடர்பாக உள்ள கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களும் இதோ:
வருமான வரி தாக்கலுக்கு புதிய கால அவகாசம் என்ன?
மத்திய அரசின் அறிவிப்பின்படி தற்போது 2020-2021ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய மக்களுக்கு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்கள் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்?
வருமான வரி தணிக்கை அறிக்கை(Tax Audit report) தாக்கல் செய்வதற்கு தற்போது அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாக உள்ளது.
ஃபார்ம்-16 கொடுக்க வேண்டிய கடைசி நாள்?
ஒவ்வொரு பொருளாதார ஆண்டின் முடிவிலும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஃபார்ம்-16 கொடுப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது நிறுவனங்கள் வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் ஃபார்ம்-16 படிவத்தை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும்.
திருத்தப்பட்ட மற்றும் தாமதான வருமானி வரி தாக்கலுக்கு கடைசி நாள்?
வருமான வரி தாக்கல் செய்ய தற்போது உள்ள கடைசி நாளான செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செய்யாதவர்கள், அபராதம் செலுத்தி வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். மேலும் வருமான வரியில் தாக்கலில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்பவர்கள் ஜனவரி 31ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.
நிதி நிறுவனங்கள் தங்களின் ஆண்டு நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்ய கடைசி நாள்?
நிதி நிறுவனங்கள் ஆண்டு தோறும் தங்களுடைய நிதி பரிவர்த்தனை அறிக்கையை மே மாதம் 31ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த நிறுவனங்களுக்கும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிறுவனங்கள் தங்களுடைய நிதி பரிவர்த்தனை அறிக்கையை வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
மக்கள் வருமான வரியை தாக்கல் செய்ய https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்தில் சென்று இணையதளம் வழியாக தங்களுடைய வருமான வரியை தாக்கல் செய்யலாம்.