கொரோனா காரணமாக உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் குழந்தைகள் தங்குவதற்கு முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு இடம் வழங்கப்படும். பட்டப்படிப்பு வரையிலான கல்வி மற்றும் விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்கும். அரசு விடுதிகளில் தங்காமல் உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித்தொகை 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா மனைவி பரமேஸ்வரி அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், நாள்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கி வரும் திட்டத்திற்க்கு, அன்னதான நன்கொடை வழங்கிட விரும்புவோர் அறநிலையத் துறை இணையதளத்தின் “http://hrce.tn.gov.in” மூலம் நேரடியாக வழங்கலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
நாடு முழுவதும், கடந்த 24 மணிநேரத்தில் 1,14,428 புதிதாக கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 2,84,601 நோயாளிகள் குணமடைந்தனர். தொற்றிலிருந்து குணமடைபவர்களின் விகிதம் 90.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி பத்து மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து, மத்திய தொகுப்பு மூலம் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
ஓ.என்.வி இலக்கிய விருதைத் திருப்பி கொடுப்பதாகவும், பரிசுத் தொகையை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 16 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 680 ஆகும். தமிழ்நாட்டில் இன்றும் கொரோனா தொற்று காரணமாக 486 நபர்கள் உயிரிழந்தனர்.
கேரளாவில், ஜூன் 9-ஆம் தேதி வரை தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்/தத்து பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் மூலம் ஆதரவளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. குழந்தைக்கு 18 வயதாகும் போது பயன்படும் வகையில் ரூ 10 லட்சம் வைப்புத்தொகை செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தோரை சார்ந்திருப்பவர்களுக்கு பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க:
1. ONV விருதே வேண்டாம்.. உண்மையை உரசிப் பார்க்க வேண்டாம் - வைரமுத்து
2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் - பிரதமர் மோடி அறிவிப்பு