இந்தியாவில் பிரபலமான டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்களுள் ஒன்று பேடிஎம். இந்த நிறுவனத்தின் சேவைகள் தற்போது இந்தியாவில் அதிக இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேடிஎம் வாலெட் முறை பல இடங்களில் பணம் செலுத்த முக்கிய கருவியாக செயல்பட்டு வருகிறது. பங்குச்சந்தையில் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு 16 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இந்தச் சூழலில் பேடிஎம் நிறுவனம் ஐபிஓ முறையில் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இந்த முறை மூலமாக சுமார் 3 பில்லியன் டாலர் வரை கடனை ஈட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது இந்திய மதிப்பில் 21,800 கோடி ரூபாய் வரை பணம் பங்குகள் விற்பனை மூலம் ஈட்ட உள்ளது. அத்துடன் பங்குச்சந்தையில் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பை 25-30 பில்லியன் டாலர் ஆக உயர்த்தவும் அந்த நிறுவனம் முயற்சித்து வருகிறது. கடந்த 2019-20 நிதியாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் லாபம் 2942 கோடிய ரூபாயாக இருந்தது. 2020-21ஆம் ஆண்டிற்கான தணிக்கை இன்னும் நடைபெறததால் கடந்த நிதியாண்டில் பேடிஎம் எவ்வளவு லாபம் ஈட்டியது என்பது குறித்து சரியாக தெரியவில்லை. 


தற்போது பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் வாலெட் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை 350 மில்லியனை தாண்டியுள்ளது. அத்துடன் கடந்த நிதியாண்டில் பேடிஎம் நிறுவனம் மூலம் நடைபெற்ற பணபரிவர்த்தனை 12 சதவிகிதம் வரை அதிகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வரும் 2023ஆம் ஆண்டிற்குள் பேடிஎம் நிறுவனத்தின் லாபம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 




பணப்பரிவர்த்தனை தவிர பேடிஎம் பங்குச்சந்தையில் பங்குகள் வர்த்தகம், காப்பீடு உள்ளிட்ட தொழில்களிலும் இறங்கியுள்ளது. மேலும் பேடிஎம் பெய்மெண்ட் வங்கியும் தற்போது நடத்தி வருகிறது. இந்த வங்கியை சிறிய அளவில் நிதியளிக்கும் வங்கியாக மாற்றவும் பேடிஎம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் புதிய டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக மற்றொரு புதிய நிறுவனத்தை தொடங்கவும் ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் கேட்டுள்ளது. 


பேடிஎம் நிறுவனத்தின் பங்குச்சந்தை ஐபிஒ விற்பனை உண்மையாகும் பட்சத்தில் அது இந்தியாவில் பங்குகள் மூலம் அதிகளவில் பணம் ஈட்டிய ஒன்றாக அமையும். ஏனென்றால், இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டு மத்திய நிலக்கரி நிறுவனம் பங்குகள் விற்பனையின் மூலம் 15 ஆயிரம் கோடி வரை ஈட்டியது. அதை வெற்றிகரமாக தன்னுடைய பங்குகளை விற்கும் பட்சத்தில் பேடிஎம் நிறுவனம் முறியடிக்கும்.




இந்த பங்குகள் விற்பனை தொடர்பாக பல முன்னணி முதலீட்டு நிறுவனங்களுடன் பேடிஎம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்தப் பங்கு விற்பனைக்கான வேலைகள் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தையில் முழுமையாக பங்குகள் விற்பனை வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கருதப்படுகிறது. இந்த பங்குகளை வாங்க மோர்கன் ஸ்டான்லே நிறுவனம் அதிக முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.