நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் நுகர்வோராக இருந்து வருகிறோம். சிறந்த நுகர்வோராக இருக்கும் வரையில்தான் சிறந்த மனிதன் என்ற வரையரைக்குள் இருக்க முடியும் என்ற போக்கு தற்போது உள்ளது. இந்த போக்கில் தவறில்லை என்பதே இன்றைய எதார்த்தம். இந்த நுகர்வு கலாசராத்தில் தகவல் முக்கிய பங்கு வகிக்கிறது. நவம்பர் 1ம் தேதி முதல் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளன. அதில், இதில் குறிப்பிட்ட சிலவற்றை இங்கே காணலாம்.     


இன்று முதல் பாங்க் ஆப் பரோடா வங்கி சேவைக் கட்டணங்கள் மாற்றம் :   இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான  பாங்க் ஆப் பரோடா தனது வங்கியில் பணம் எடுத்தல் மற்றும் பணத்தை டெபாசிட் செய்தல் இவற்றிற்கான வாடிக்கையாளருக்கான கட்டணங்களை இன்று முதல் மாற்றியமைத்துள்ளது. அதன்படி, இதுவரை கட்டணங்கள் இல்லாமல் வழங்கி வந்த இந்த இரண்டு சேவைகளுக்கும் இன்று முதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. புதிய அறிவிப்பின் படி, முதல் மூன்றுக்குப் பிந்தைய டெபாசிட்களுக்கு ரூ. 40 வாடிக்கையாளர்கள் கட வேண்டும். அதே போன்று, வங்கியில் கடன் பெறும் வாடிக்கையாளர்கள் ரூ. 150 சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.  


நவம்பர் 1 (இன்று ) முதல் ‛வாட்ஸ்அப் ’ செயலி சில ஸ்மார்ட்போன்களில் இயங்காது:  


இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஆண்ட்ராய்ட், iOS ஆகியவற்றின் பழைய வெர்ஷன்களில் வாட்சாப் செயலி செயல்படாது என அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்ட் OS 4.1 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆபரேடிங் சிஸ்டங்களைக் கொண்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்கள், iOS 10 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆபரேடிங் சிஸ்டங்களைக் கொண்ட ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகியவற்றில் மட்டுமே வாட்சாப் செயலி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் Settings பகுதிக்குச் சென்று, உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஆபரேடிங் சிஸ்டத்தின் வெர்ஷனைத் தெரிந்துகொள்ளலாம். இந்த வசதி ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஆகிய இரு ஆபரேடிங் சிஸ்டங்களிலும் உண்டு. எனவே அடுத்த 10 நாள்களுக்குள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் ஆபரேடிங் சிஸ்டத்தின் வெர்ஷன் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது உங்களைத் தயாராக வைத்துக் கொள்ள உதவும். 


சமையல் எரிவாயு விலை:  ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்றும், சமையல் எரிவாயு விலை, முந்தைய மாதத்தின் சர்வதேச சந்தை விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.   


கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு விலை ரூ.710 என்ற அளவில் தான் இருந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4-ஆம் தேதி ரூ.25, 15-ஆம் தேதி ரூ.50, 25-ஆம் தேதி ரூ.25 என மொத்தம் ரூ.100 உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் மார்ச் ஒன்றாம் தேதியும், ஜூலை ஒன்றாம் தேதியும், அகஸ்ட் ஒன்று மற்றும்18ம் தேதியும் செப்டம்பர் ஒன்றாம் தேதியும் முறையே ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளன. இடையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி மட்டும் சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.10 குறைக்கப்பட்டது.  இந்த, ஆண்டில் மட்டும் ரூ. 290 விலை ஏற்றப்படிருக்கிறது.எனவே, இந்த நவம்பர் மாதமும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    


ஓடிபி எண் காண்பித்தால்தான் சிலிண்டர்: இன்று (நவம்பர் 1) முதல் எல்பிஜி சிலிண்டர்களை சப்ளை செய்வதில் புதிய விநியோக முறையை செயல்படுத்த  அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் முடிவெடுத்து உள்ளன. சிலிண்டர் விநியோகம் செய்ய வருபவரிடம் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பிய OTP-ஐக் கூற வேண்டும். எனவே, இன்று முதல் ஓடிபி (One-Time Password) எண்ணை கொடுக்காத வாடிக்கையாளர்களுக்கு இனி சிலிண்டர்கள் வழங்கப்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.