வீட்டில் உபயோகிக்கும் சமையல் எரிவாயு(LPG Gas Cylinder) விலை ரூ.25 அதிகரித்துள்ளது.14 கிலோ சமையல் எரிவாயுவின் விலை  25 ரூபாய் அதிகரித்து ரூ.900க்கு இன்று முதல் விற்கப்படுகிறது.  பெட்ரோல் டீசல் மீதான சுங்க வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் மானிய விலை சிலிண்டர் விலை தற்போது ரூ.900 என அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ. 285 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

  


அதே சமயம், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ. 75 உயர்ந்து, 1831.50 ரூபாய்க்கு இன்று முதல் விற்கப்படுகிறது. 


சமையல் எரிவாயு விலை, முந்தைய மாதத்தின் சர்வதேச சந்தை விலை அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவுக்கு, பாஹல் (PAHAL) திட்டத்தின்கீழ், மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது.  இந்த மானியத் தொகை, பாஹல் திட்ட  நுகர்வோருக்கு நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. 


தற்போது நாடுமுழுவதும் 27.76 கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகளுடன் 97 சதவீத அளவுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  வருமான வரி செலுத்தும் 1.5 கோடி நுகர்வோருக்கு, சர்வதேச சந்தை‌ விலையின் மாறுபாடுகளுக்கு இணங்க எண்ணெய் நிறுவனங்கள் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரை விநியிகிகிக்கின்றன. மீதமுள்ள 26.12 கோடி நுகர்வோருக்கான, பாஹல் (PAHAL) திட்டத்தின்கீழ் கூடுதல் விலைச் சுமையை மானியத் தொகை உயர்வு மூலம் அரசே ஏற்றுக் கொள்கிறது. ஆனால், கடந்தாண்டு சந்தை விலைக்கும்,மானியமாக வழங்கப்பட்ட சிலிண்டர் விலைக்கும் உள்ள இடைவெளி குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, மத்திய அரசு சமையல் எரிவாயு நுகர்வோருக்கு மானியம் வழங்குவதை முற்றிலுமாக நிறுத்தியது (16 கோடி நுகர்வோர்). சர்வதேச சந்தை விலை குறைந்தாலும், எண்ணெய் நிறுவனங்கள் மானியம் மற்றும் மானியம் அல்லாத சிலிண்டர்களின் விலையை சமநிலையில் வைத்திருக்கவே முயற்சிக்கின்றன.     


இந்த நடவடிக்கையால் 2021 நிதியாண்டில் இருந்து, மத்திய அரசு 20,000 கோடிக்கும் மேலான தொகையை சேமித்துள்ளது.  சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு மானியத்திற்காக  2021-22 நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ. 37,256.21 கோடியை  ஒடுக்கியிருந்தது. ஆனால், கடந்தாண்டு முதல் காலாண்டில் 1,900 கோடி மட்டுமே மத்திய அரசு மானியத்திற்காக செலவளித்தது.  கொரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ், பிரதமரின் உஜ்வால் திட்ட பயனாளிகளுக்கு (8 கோடி நுகர்வோர்) மட்டுமே கடந்தாண்டு மானியம் வழங்கப்பட்டது