ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ரயிலில் பேட் மேன் ஜோக்கர் போன்று உடையணிந்து வந்து சக பயணியை ஒருவர் சரமாரியாகக் குத்தியுள்ளார். பின்னர் ரயிலுக்கு தீ வைத்துள்ளார்.  இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 


ஜப்பானில் மாறு வேடப் போட்டியான ஹாலோவீன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் ஒருவர் ஜோக்கர் உடையணிந்து வந்துள்ளார். அவர் ரயிலில் இருந்த 60 வயதான நபரை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். மேலும் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி ரயிலுக்கும் தீ வைத்தார். இது தொடர்பான வீடியோக்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் எமர்ஜென்சிக்காக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயந்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளனர்.  






இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த நபர், ஹாலோவீன் விழாவின் நோக்கம் மற்றவர்களை பயமுறுத்துவது. அவர் அந்த விழாவைக் கொண்டாடுவதற்காக அவ்வாறு உடையணிந்து வந்ததாக நினைத்தோம். அவர் வயதானவரைக் கத்தியால் குத்தியபோது சகபயணிகள் அனைவரும் ரயில் பெட்டிகளிலிருந்து ஓடத் தொடங்கினார். பின்னர் அந்த நபர், தான் வைத்திருந்த பெரிய கத்தியை மெதுவாக அசைத்தபடியே நடந்தார். அவர் வைத்திருந்த கத்தியில் ரத்தம் இருந்தது” என தெரிவித்தார். முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் இவற்றை அந்த நபர் செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். 




இந்நிலையில் 24 வயதான அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மக்களை கொல்ல விரும்பியதாக அவர் போலிஸில் அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.