25 வருடப் பழைமை வாய்ந்த ஜஸ்ட் டயல் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ரூ 3497 கோடிக்கு வாங்கவிருப்பதாக கடந்த ஜூலை மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் நேற்று செபி (SEBI) வழிகாட்டுதல்களின்படி அந்த நிறுவனத்தின் பங்குகளை விலைக்கு வாங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. 
 
முன்னதாக ஜஸ்ட் டயல் நிறுவனத்திடமிருந்து அதிகபட்சமாக 40.95 சதவிகிதப் பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ் அடுத்தகட்டமாக 26 சதவிகிதப் பங்குகளைக் கையகப்படுத்துவதாக அறிவித்தது. 


இந்தநிலையில் நேற்று பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்திய பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் தொடர்பான செபியின் புதிய ஓழுங்குமுறைகள் 1 செப்டம்பர் 2021 முதல் அமலுக்கு வந்துள்ளது இதன் அடிப்படையில் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை முழுவதுமாக ரிலையன்ஸ் இனி தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறது. 






ரிலையன்ஸின் சில்லறை வர்த்தக நிறுவனம் கடந்த ஜூலை மாதம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை பங்கு ஒன்றுக்கான விலை 1020 ரூபாய் என மொத்தம் 1.31 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை தரகு அடிப்படையில் வாங்கியது. இதன்மூலம் 15.63 சதவிகித பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியது.


அடுத்ததாக நேற்று பங்கு ஒன்றுக்கான விலை 1022 ரூபாய் வீதம் 2.12 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க ஜஸ்ட் டயல் நிறுவனம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தில் 25.35 சதவிகிதப் பங்குகளை தற்போது ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ளது. ஆக மொத்தம் இதுவரை 40. 98 சதவிகிதப் பங்குகளை ஜஸ்ட் டயல் நிறுவனரான வி.எஸ்.எஸ். மணியிடமிருந்து இதுவரை ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ளது.


 ரிலையன்ஸ் குழுமம் வாங்கி இருந்தாலும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக வி.எஸ்.எஸ். மணியே தொடருவார் என ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வசம் 3 கோடி பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் பிரத்யேகமாக 12.9 கோடி வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் இணையதளம், செயலி மற்றும் போன் மூலமாக வருகிறார்கள். வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,690 கோடியாக  இருக்கிறது.


ஆனால் இது இந்த நிறுவனத்தின் உச்சபட்ச சந்தைமதிப்பு அல்ல. 2014-ம் ஆண்டு சமயத்தில் சுமார் ரூ.12,000 கோடிக்கும் மேலே நிறுவனத்தின் சந்தை மதிப்பு இருந்தது. ஆனால்  அதன்பிறகு படிப்படையாக குறையத் தொடங்கியது.தற்போது 6690 கோடி ரூபாய் நிறுவனமாக இருந்தாலும் 1996-ம் ஆண்டு சுமார் 50000 ரூபாயில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது.

Also Read: இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பாடம் எடுத்த ஷர்‛தூள்’... அரை சதம் அடித்து காப்பாற்றினார்!