தமிழ்நாடு முழுவதும் கடந்த 2003 ஆம் ஆண்டில் தேர்வாகி காவல்துறை பணியில் சேர்ந்த 5600 காவலர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து "காவலர் உதவும் கரங்கள் 2003 குழு" எனும் சமூக ஊடக குழுவை உருவாக்கி தங்கள் பேட்ஜ் காவலர்களுக்குத் தேவையான உதவிகளை எந்த கைமாறும் எதிர்பார்க்காமல் "உதவும் கரங்களாய் உயிர் தருவோம் நாங்கள், நம்பிக்கை நிழலில் ஓய்வெடுங்கள் நீங்கள்" என்ற முழக்கத்துடன் அவர்களது நண்பர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். தற்போது  டெலிகிராம் செயலியில் இவர்கள்  பேட்ஜை சேர்ந்த அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு புதிய குழுவை உருவாகியுள்ள இவர்கள் வேலூரில்  உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு தாமாக முன்வந்து  27 லட்சத்து 99 ஆயிரம் நிதியை திரட்டி  வழங்கி உள்ளனர். 



 

தொடர்ந்து இது போன்ற உதவிகளைச் செய்துவரும் தமிழ் நாடு  2003 பேட்ஜ் காவலர்களின் உதவும் கரங்கள் குழுவினரின் இந்த செயல்பாடுகள் சக காவலர்கள் மத்தியிலும் காவல் உயர் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (41). இவர் 2003ஆம் ஆண்டு காவலராக பணிக்குச் சேர்ந்து 2008 இல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்றார் . தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம், வேலூர் சரகத்திற்கு உட்பட்ட பல காவல் நிலையங்களில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர் ,  இறுதியாக வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சிறப்பு  உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார் . இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் கடந்த மே மாதம் 8ஆம் தேதி உயிரிழந்தார். 



 

 

இவரது மனைவி கோமதியும் வேலூரில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இறந்த செல்வராஜுக்கு  9, 7, 6 ஆகிய வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் இறந்த தகவல் அறிந்து 2003 ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள் 5598 பேர் டெலிகிராம் செயலி மூலம்  நபர் ஒருவருக்கு  தலா 500 ரூபாய் வீதம் நிதி திரட்டி அதன் மூலம்  27 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயைத் திரட்டியுள்ளனர் . 

 

மேலும் திரட்டப்பட்ட நிதியை அவரது மூன்று பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உதவுவதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய இவர்கள் செல்வராஜின் 3 பெண் பிள்ளைகள் மீது தலா 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு LIC நிறுவனத்தில் தனித்தனியாக 3 பிள்ளைகள் மீதும் பாலிசிகளை  (காப்பீடு) எடுத்து அதற்கான ஆவணங்களை மறைந்த காவலரின் மனைவி கோமதியிடம் (புதன்கிழமை) வேலூரில் உள்ள அவரது வீட்டில் வழங்கினர். மேலும் பாலிசி மூலம் கிடைக்கப்பெற்ற முகவர் கமிஷன் 54 ஆயிரத்து 55 ரூபாய் ரொக்க பணத்தையும் கோமதியிடம்  ஒப்படைத்தனர் .

 



 

ஏற்கனவே சென்னை, மதுரை, அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்களின் 2003 பேட்ஜில்  உயிர் இழந்த காவலர் குடும்பங்களுக்கு இதுபோலவே  நிதி திரட்டி உதவி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடன் பணியில் சேர்ந்த  காவலரின் குடும்பத்திற்கு  2003 பேட்ஜ் காவலர்களின் 'உதவும் கரங்கள் குழு'  தானாக முன்வந்து தொடர்ச்சியாக உதவி செய்துவரும்  செயல்  ஒரு  முன்மாதிரியான செயல் என்று சமூக வலைத்தளங்களில் அனைவரின்  பாராட்டுகளைப்  பெற்று வரலாகப் பேசப்பட்டு வருகின்றது .