நடிகரும், பிக்பாஸ் 13-இன் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக மும்பையில் காலமானார்.  அவருக்கு வயது 40. மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 






மிக இளவயதிலேயே ஏற்பட்டிருக்கும் இந்த மரணத்தை அவருக்கு நெருக்கமான இந்தி மெகாசீரியல் வட்டாரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன.






உண்மையில் மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது? 


இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பு பெரும்பாலும் கொழுப்பு அல்லது பிற பொருள்களால் ஏற்படுகிறது.இவை ரத்தநாளத்தை அடைப்பதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது அதனால் இதயத்தின் தசைகளும் பாதிக்கப்படுகிறது.
மாரடைப்புக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா? 


நெஞ்சில் அழுத்தம், இறுக்கம், வலி, நெஞ்சைப் பிசைவது போன்ற உணர்வு, வலி நெஞ்சிலிருந்து கைகள் மற்றும் கழுத்துக்குப் பரவுவது போன்ற உணர்வு, மூச்சடைப்பு, வியர்வை, மயக்க உணர்வு ஆகியன மாரடைப்புக்கான அறிகுறிகள்



ஒவ்வொருவருக்கும் இந்த அறிகுறிகள் மாறுபடும். சிலருக்கு அறிகுறியே தோன்றாது. சிலருக்கு மாரடைப்பு திடீரென ஏற்படும். சிலருக்கு அதற்கான அறிகுறிகளை முன்பே காண்பித்துக் கொடுக்கும். அறிகுறிகள் தென்படும்போதே சுதாரித்துக் கொண்டு மருத்துவர்களை அணுகுவது நல்லது.  இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்கெனவே உடையவர் என்றால் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைக் கையில் எப்போதும் வைத்திருங்கள். 


நம் கண் முன்னால் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? 


உடனடியாக மருத்துவ உதவி அவசரத்துக்கான ஆம்புலன்ஸ் எண் 108க்கு அழையுங்கள். அந்த நபர் மூச்சுவிடுகிறாரா? நாடி துடிக்கிறதா? என்பதை சோதனை செய்யுங்கள். 


ஒருவேளை மூச்சு இல்லை அல்லது நாடியும் துடிக்கவில்லை என்றால் உடனடியாக அவருக்கு சி.பி.ஆர் என்னும் முதலுதவியைச் செய்ய வேண்டியது அவசியம். அவரது நெஞ்சின் மீது இரண்டு கைகளையும் குவித்து அழுத்த வேண்டும். ஒரு நிமிடத்துக்கு 100-120 முறை அழுத்தவேண்டும். 


சிபிஆர் முறையில் பயிற்சி பெற்றவர் என்றால் மட்டுமே வாய்மீது வாய் வைத்து முதலுதவி செய்யவேண்டும். என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.