சென்னையில் 2வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.47க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 29-ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் நேற்று முன்தினம் வரை பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டது. கடந்த  26 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.49-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.


இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “ இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.“ இவ்வாறு அவர் கூறினார்.




தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பால் விலை குறைப்பு அன்று நள்ளிரவு முதல் அமலாகி, தமிழ்நாட்டில் மூன்று இலக்கத்தில் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை மீண்டும் இரட்டை இலக்கத்தில் விற்கப்பட்டது.  டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விற்கப்பட்டு வருகிறது.


முன்னதாக, நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்தது. நாட்டிலே முதன்முறையாக மகாராஷ்ட்ராவில் பெட்ரோல் விலை ரூபாய் 100-ஐ கடந்தது. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி பெட்ரோல் விலை மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ரூபாய் 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. பின்னர், கடந்த இரு மாதங்களாக மாநிலம் முழுவதும் பெட்ரோல் விலை ரூபாய் 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. 


பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்:


இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 2014 முதல் தற்போது வரை பெட்ரோல் நுகர்வு விலையில் 40 சதவீத உயர்வு காணப்படுகிறது. ஆனால், இந்த காலகட்டங்களில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் 27 சதவீத விலை சரிந்துள்ளது. 


TN Budget 2021: தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மீதான வரி ரூ.3 குறைப்பு - நிதியமைச்சர் அறிவிப்பு