தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்த இந்த புதிய பட்ஜெட்டில் மக்களின் மிகுந்த எதிர்பார்த்தது பெட்ரோல் மீதான விலை குறைப்பையே.


இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “ இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.“ இவ்வாறு அவர் கூறினார்.




தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பால் தமிழ்நாட்டில் மூன்று இலக்கத்தில் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை மீண்டும் இரட்டை இலக்கத்தில் விற்கப்பட உள்ளது. முன்னதாக, நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்தது. நாட்டிலே முதன்முறையாக மகாராஷ்ட்ராவில் பெட்ரோல் விலை ரூபாய் 100-ஐ கடந்தது. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி பெட்ரோல் விலை மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ரூபாய் 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. பின்னர், கடந்த இரு மாதங்களாக மாநிலம் முழுவதும் பெட்ரோல் விலை ரூபாய் 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




முன்னதாக, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறியிருந்தனர். கடந்த மாதம் பேட்டியளித்திருந்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல் விலை குறைப்பு என்பது தற்போது சாத்தியமில்லை என்பது போல கருத்து தெரிவித்திருந்தார். இதனால், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் உண்டானது.


மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடந்த 10 ஆண்டுகளுக்கான நிதிநிலை குறித்து வெளியான வெள்ளை அறிக்கை அடிப்படையில் நிதிநிலை அறிக்கையில் புதிய வரிவிதிப்புகளுக்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், நிதியமைச்சர் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை ரூபாய் 3 குறைத்து புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். சென்னையில் இன்று பெட்ரோல் ரூபாய் 102.55க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரிபங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


TN Budget 2021 : நிதிநிலை சிக்கலை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகும் - நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்


தி.மு.க. அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை ரூபாய் 3 குறைத்திருப்பதற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த வரவேற்பை தெரிவித்துள்ளனர்.