லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்செய்த இந்திய அணி கே.எல்.ராகுலின் அபார சதத்தாலும், ரோகித் சர்மாவின் அதிரடியாலும், கேப்டன் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 364 ரன்களை குவித்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டாமினிக் சிப்ளி, ஹசீப் ஹமீது அடுத்தடுத்து ஆட்டமிழக்க தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஜானி பார்ஸ்டோ களத்தில் நின்றனர்.


மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது முதல் ஜோ ரூட் மற்றும் ஜானி பார்ஸ்டோ நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 229 ரன்னாக உயர்ந்த போது 57 ரன்களை சேர்த்த ஜானி பார்ஸ்டோ முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 23 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.




அடுத்து களமிறங்கிய மொயின் அலி, கேப்டன் ஜோ ரூட்டுடன் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினார். மறுமுனையில் களத்தில் நங்கூரமாக நின்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது 22வது சதத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்தார். இந்த போட்டி மூலம் ஜோ ரூட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கிரகாம் கூச்சை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக் உள்ளார்.


மிகவும் நிதானமாக ஆடிய மொயின் அலியை இஷாந்த் சர்மா வெளியேற்றினார். 72 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களை குவித்த மொயின் அலி இஷாந்த் சர்மா பந்துவீச்சில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சாம் கரனும் தான் சந்தித்த முதல் பந்திலே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 116 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 286 பந்துகளில் 159 ரன்களுடனும், ராபின்சன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.




இந்திய அணியில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 24 ஓவர்கள் வீசி 69 ரன்ளை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ் 75 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முகமது ஷமி 1 விக்கெட்டை கைப்பற்றினார். இங்கிலாந்து அணி தற்போதுள்ள சூழலில் இந்திய அணியை விட 7 ரன்கள் மட்டுமே குறைவாக உள்ளது. அவர்கள் வசம் மூன்று விக்கெட்டே உள்ளதால், எஞ்சிய விக்கெட்டை இந்திய அணி விரைவில் வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை அடித்து, அதை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் இந்த போட்டி டிராவிலோ அல்லது இந்திய அணி குறைவான ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இங்கிலாந்து வெற்றி பெறவோ வாய்ப்பு உள்ளது.