பேருந்து, ஆட்டோ, கார், தண்ணீர் லாரி, காய்கறி வண்டி என வாகனங்கள்தான் நம் வாழ்வின் அங்கமாக உள்ளன. நம் வீட்டு சமையலறைக்கு வரும் கிராம்பு எங்கேயோ மலையில் விளைந்ததாக இருக்கலாம். ஒரே கூடையில் இருக்கும் பல காய்கறிகளும் பல்வேறு இடங்களில் விளைந்தவை. இவை அனைத்தும் நம்மை வந்து சேர்கின்றன என்றால் அதற்கு காரணம் போக்குவரத்து. வாகன போக்குவரத்தின் அச்சாணி எரிபொருள். அதனால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைவராலும் கவனிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் எனக்கென்ன? என்னிடம் ஒரு பைக் கூட இல்லை என்று தனியாக ஒதுங்கிக் கொள்ள முடியாது. எரிபொருள் விலை ஏற்றம் என்பது கடைகோடி சாமனியன் வரை பாதிக்கக் கூடியது. பெட்ரோல் டீசல் விலை ஏறினால் காய்கறி ஏற்றி வரும் லாரியின் வாடகை கூடும், அந்த விலை காய்கறி மொத்தகொள்முதலில் கூடும். அவர் தள்ளுவண்டி காய்கறி விற்பனையாளரிடம் விலையை அதிகரிப்பார். பிறகு என்ன? 'எங்களுக்கே இன்னைக்கு ரேட் அதிகம்' என்று கூறிகொண்டே காய்கறியை நம் வீட்டு கூடையில் அள்ளி போடுவார் அந்த தள்ளுவண்டி காரர்.
இப்படிதான் விலை ஏற்றம் கடைகோடி வரை சங்கிலியாக தொடரும். இன்று இதுகுறித்து பேசக்காரணம் கொரோனா பரபரப்புக்கு இடையே சத்தமில்லாமல் சதத்தை தொட இருக்கிறது பெட்ரோல் விலை. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.96.94, டீசல் விலை ரூ.91.15 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது சென்னையில் விற்பனை செய்யப்படும் விலை தான் போக்குவரத்தை கணக்கிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விலைமாற்றம் இருக்கும். அப்படிபார்த்தால் தமிழகத்தில் ரூ.99 முதல் ரூ.100க்குள் தள்ளாடிக் கொண்டிருக்கிறது பெட்ரோல் விலை. நாளையோ, இன்னும் சில தினங்களிலோ சதத்தை தொட்டு இடியை இறக்கவுள்ளது பெட்ரோல் விலை.
இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மாற்றம் என்ற முறை இருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை விலை நிலவரம் வெளியாகும். பின்னர் 2017ம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு நாள்தோறும் 10 காசுகள், 12 காசுகள் என பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது.சத்தமில்லாமல் பைசாக்களில் தினந்தோறும் ஏறுவதால் அதனை மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. சிறு துளி சேர்ந்தால் பெருவெள்ளம் தானே வர வேண்டும். அப்படி இன்று உச்சத்தில் நிற்கிறது பெட்ரோல் டீசல் விலை. அது சரி, ஒருநாள் விலை ஏறுகிறது, ஒருநாள் விலை குறைகிறது, சில நாள் அதேவிலையில் நீடிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை எதை பொருத்து நிர்ணயம் செய்யப்படுகிறது? தினமும் அதிகரித்து குறைய காரணம் என்னவென்று சந்தேகம் வருகிறதா? மேற்கொண்டு படிங்கள்.
பெட்ரோல், டீசல் நேரடியாக பூமியில் இருந்து கிடைக்காது. அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் என்ற ஒரு திரவம் அதிகம் கிடைக்கிறது. இதைத் தான் குரூட் ஆயில் என்கிறார்கள். கச்சா எண்ணெயை எடுத்து சுத்திகரிப்பு செய்தால் அதில் இருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பிரித்து எடுக்கப்படுகிறது. எடுக்கப்படும் கச்சா எண்ணெயை ஒரு பீப்பாய் என்ற முறையில் விற்பனை செய்வார்கள். அதுதான் பேரல். ஒரு பேரல் என்பது 159 லிட்டர் கச்சா எண்ணெய். இந்த பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்க டாலரில் தினம் தோறும் நிர்ணயம் செய்வார்கள். சில தினங்களுக்கு முன்பு பேசிய பெட்ரோலிய துறை அமைச்சர் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 டாலர் விற்பனை ஆகிறது. அதுதான் பெட்ரோல் விலையேற்றத்துக்கு காரணம் என்றார். அதனை கணக்கிட்டால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் என்பது இந்திய ரூபாய் மதிப்பில், கிட்டத்தட்ட ரூ.5000. அப்படியென்றால் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் சராசரியாக ரூ. 31 ஆக உள்ளது.
இதை பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்ற சுத்திகரிப்பு செய்ய வேண்டும். அதற்கான செலவும் இதில் சேர்க்கப்படுகிறது. கச்சா எண்ணெயை பெட்ரோலாக மாற்ற ஒரு லிட்டருக்கு சராசரியாக ரூ.4 செலவாகிறது. அப்படியானால் ஒரு லிட்டர் பெட்ரோல் என்பது உருவாக்கப்படும் இடத்தில் சராசரியாக ரூ.35ஆக உள்ளது.
இந்த பெட்ரோல் விலை மீது மத்திய அரசு கலால் வரியை விதிக்கிறது.கிட்டத்தட்ட 33 ரூபாயை வரியாக விதிக்கிறது மத்திய அரசு. அப்படியானால் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்தியாவுக்குள் நுழையும் போது ரூ.68 ஆக உள்ளது.
இது தமிழகத்துக்குள் நுழையும் போது மாநில அரசும் வரி விதிக்கிறது. இந்த வரி சராசரியாக ரூ.20-25 ஆக உள்ளது. அப்படியானால் பெட்ரோல் விலை தமிழகத்துக்குள் வரும்போது ரூ.90 ஐ தாண்டுகிறது. இதற்கு மேல் டீலர் கமிஷன் உள்ளது. அதாவது பெட்ரோல் பங்குக்கு கொடுக்கப்படும் எரிபொருளுக்கு குறிப்பிட்ட ரூபாய் கமிஷனாக இருக்கும். அதன்படி ஒரு லிட்டருக்கு சராசரியாக ரூ.3-முதல் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலைதான் தமிழகத்திற்குள்ளேயே விலை வேறுபாட்டுக்கான காரணம்.
இதையும் சேர்த்து வரும் மொத்த விலை தான் அன்றைய தின பெட்ரோல் விலை. அப்படியானால் ரூ.35க்கு தொடங்கும் பெட்ரோலின் பயணம் நம் வாகனத்துக்கு வரும் போது ரூ.95ஐ தாண்டுகிறது. தினம் தோறும் கச்சா எண்ணெயில் விலை மாற்றம் செய்யப்படுவதால் அந்த தாக்கம் கடைசி புள்ளி வரை ஏற்படுகிறது.
ஐ.ஓ.பி.,க்கு ஆபத்து; முதல்வர் தலையிட வங்கிகள் கூட்டமைப்பு கோரிக்கை