இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்மயமாக்க உள்ளதாக அறிவித்தார். எந்தெந்த வங்கிகளை தனியார்மயமாக்குவது என்பது தொடர்பாக நிதிஆயோக் அமைப்புக்கு தனது பரிந்துரைகளை அனுப்பி உள்ளது மத்திய அமைச்சரவை செயலகம். இந்த பரிந்துரை பட்டியலில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா உள்ளிட்ட வங்கிகள் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



மேலும் இந்த நான்கு வங்கிகளை எந்த வங்கிகளை தனியார்மயமாக்குவது என்பது குறித்து பல்வேறு முக்கியதுறைகளின் செயலர்கள் உடனான ஆய்வுக்கூட்டங்களுக்கு பிறகு நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர், வருவாய் துறைக்கான செயலர், செலவீனத்துறைகளுக்கான செயலர், பெருநிறுவன விவகாரங்களுக்கான செயலர், சட்ட விவகாரங்கள் துறைகளுக்கான செயலர், பொதுத்துறை நிறுவனங்கள் துறைக்கான செயலர், முதலீடு-பொதுச்சொத்துக்கள் மேலாண்மை துறைக்கான செயலர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு பரிந்துரைக்க உள்ள இரண்டு வங்கிகளின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக்கு அனுப்பும், அமைச்சரவை கூடி எடுக்கும் முடிவின் அடிப்படையில் தொடர்புடைய வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும். இந்த வங்கிகள் மீது தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கினால், முதற்கட்டமாக இந்த வங்கிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும். நடப்பு நிதியாண்டில் வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம் ரூபாய் 1.75 லட்சம் கோடியை ஈட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.டி.பி.ஐ வங்கியில் உள்ள பங்குகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு வங்கி கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் போராட்டத்தில் அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ பேசும்போது



மத்திய அரசு தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தற்போது நல்ல லாபத்தில் சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்தியன் ஓவர்சிஸ் வங்கி சில ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கினாலும், தற்போது லாபம் பார்க்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தென் மாநிலங்களில் அதிக கிளைகளை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் முன்னோடி வங்கியாக விளங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாவட்ட வாரியாக கூடுதல் கடன்களை துறைவாரியாக வழங்க திட்டமிட்டு மாநில வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் வங்கிகள் தனியார் மயமாக்கப்போகும் விவகாரத்தை நிதி ஆயோக் மூலமாக மத்திய அரசு கசியவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கையால் இந்த வங்கிகள் மூலம் கடன் கொடுப்பது என்பது நிற்கும் என கூறியுள்ள தாமஸ் பிராங்கோ. நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை மீட்டெடுக்க தனியார்மயம் தீர்வல்ல என்கிறார்.



நன்றாக நடக்கும் வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியால் யாருக்கு பலன் என்ற கேள்வி எழுவதாக கூறும் தாமஸ்பிராங்கோ. தனியார் வங்கிகளை பொறுத்தவரை நடுத்தர மக்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே அதிக கடன்களை வழங்கும் திட்டத்தினை கொண்டுள்ளதாகவும், பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால் கீழ்நிலை நடுத்தர மக்களும் ஏழை மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறுகிறார். கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசின் முத்ரா போன்ற பல்வேறு கடன் திட்டங்கள் பொதுத்துறை வங்கிகள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. வங்கி கிளைகளை அதிகரித்தல், வங்கி சேவைகளை அதிகம்பேருக்கு விரிவுப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் நஷ்டத்தை சரி செய்ய முடியும் என கூறும் தாமஸ் பிராங்கோ தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியார் மயாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.