பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை முறையே ரூ. 5 மற்றும் 10 ரூபாயை மத்திய அரசு குறைத்தது. இது தவிர 23 மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வாட் வரியை கணிசமாக குறைத்தன. இந்த விலை குறைப்பு மக்களுக்கான தீபாவளி பரிசு என மத்திய அரசு அறிவித்தது. இந்த விலை குறைப்பால் பணவீக்கம் 0.30 சதவீதம் அளவுக்கு குறையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இதில் நாம் கவனிக்க தவறியது பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் நிலையைதான். ஒரே நாளில் இவ்வளவு வரியை குறைத்திருப்பதால் பங்க் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.


பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவனங்களிடம் முன்கூட்டியே பணத்தை செலுத்திய பிறகுதான் விற்பனை செய்ய வேண்டி இருக்கும். இந்த நிலையில் பெரிய அளவுக்கு வரி குறைப்பு செய்திருப்பதால் பங்க் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.


நாட்டில் உள்ள ஒவ்வொரு பங்க் உரிமையாளர்களுக்கும் இந்த வரி குறைப்பு மூலம் இழப்பு ஏற்பட்டிருக்கும். சில பங்க் உரிமையாளர்கள் தீபாவளியை முன்னிட்டு கூடுதல் ஸ்டாக் வைத்திருந்தனர். அவர்களுக்கு இழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என தெரிகிறது. எவ்வளவு சிறிய டீலராக இருந்தாலும் கூட சில லட்ச ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என பங்க் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.


தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 5500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன. சமீபத்திய வரி குறைப்பு மூலம் மொத்தமாக ரூ.165 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர் சங்கம் தெரிவித்திருக்கிறது. சராசரியாக ஒரு பங்குக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டிருக்க கூடும்.


ஒவ்வொரு முறையும் வரியை குறைப்பது அல்லது உயர்த்துவது போன்றவை முன்கூட்டியே தெரியும். ஆனால் இந்த முறை இவ்வளவு பெரிய வரி குறைப்பை முன் அறிவிப்பு இல்லாமல் மத்திய அரசு செய்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்கள். கோவா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த டீலர்களும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.




ஆனால் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, விலை உயரும் என கணிக்கும் சமயத்தில் டீலர்கள் அதிக ஸ்டாக் வைத்து லாபம் பார்ப்பர்கள். அதுபோலதான் இதுவும், ( மத்திய அரசு வரியை குறைத்தது) தொழிலில் இவை இயல்புதான் என தெரிவித்திருக்கிறார்கள். அவ்வப்போது சில பைசா கூடுவதையோ குறைவையோ தொழிலில் நடக்கும் ஏற்ற இறக்கம் என  புரிந்துகொள்ளலாம். ஆனால் ஒரே சமயத்தில் பெரும் தொகை குறைத்திருப்பது நிறுவனங்களுக்கு இழப்புதான்.


கர்நாடகத்தில் குவியும் வாகனங்கள்


மத்திய அரசு எக்ஸைஸ் வரியை குறைத்ததை தொடர்ந்து பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்தது. இதில் கர்நாடக மாநிலமும் வாட் வரியை குறைத்திருக்கிறது. ஆனால் இதன் அண்டை மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. இதனால் கர்நாடகத்தில் எல்லை பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் நிரம்பி வழிகின்றன.  தமிழகத்தை விட டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய்க்கு மெல் குறைவாக பெங்களூரிவில் விற்கப்படுகிறது.


கர்நாடகாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெட்ரோல் மாநில எல்லை பகுதிகளில் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு இந்த பங்குகளில் ஒரு நாளைக்கு ரூ.3000 லிட்டர் முதல் 5000 லிட்டர் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது மூன்று மடங்குக்கு மேல் எல்லை புற பங்குகளில் விற்பனையாகிறது. இதனால் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யபட்டிருக்கிறார்கள். தவிர சரக்கு வாகனங்கள் கர்நாடகாவில் எரிபொருள் நிரப்புவதையே விரும்புகிறார்கள்.