நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தற்போது பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்கள் முடங்கி உள்ளன. அத்துடன் பொருளாதாரத்திலும் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு பலர் அதிகளவில் பணம் செலவிடும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல் தொழில்நிறுவனங்களும் இயங்க முடியாததால் தங்களின் நிறுவனத்தை எப்படி நடத்துவது என்று தவித்து வருகின்றன.
இந்நிலையில் கனரா வங்கி கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் மூன்று புதிய கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி கனரா சுரக்ஷா கடன் திட்டத்தின் மூலம் கொரோனா சிகிச்சை பெற்று வரும் தனி நபர்கள் கடன் பெற்று கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் 25000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை உடனடியாக கடன் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர்கள் முதல் 6 மாதங்கள் வரை வட்டி செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் தொழில்களுக்கு கனரா சிக்கிடிஷா சுகாதார கட்டமைப்பு கடன் திட்டம் மூலம் கடன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 லட்சம் முதல் 50 கோடி வரை கடன் வழங்கப்பட உள்ளது. இந்த வங்கி கடனை திருப்பி செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் வட்டியும் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் 18 மாதங்களுக்கு வட்டி செலுத்த விலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2022 மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் கனரா ஜீவன் ரேகா சுகாதார மற்றும் மருத்துவ பொருட்களை தயாரிக்கும் தொழில்களுக்கான கடன் திட்டம் மூலம் சுகாதாரத்துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கப்பட உள்ளது. இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் தொடர்பாக கனரா வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது. அதில் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளது.
மேலும் படிக்க:பணம் சேமிக்க உதவும் டாப் 5 மொபைல் ஆப்ஸ் !