இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவைகள் மற்றும் மாபெரும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான Tata Consutency Services (TCS) ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக, தனது வருடாந்திர சம்பள உயர்வை அறிவித்துள்ளது.
டிசிஎஸ் ஊதிய உயர்வு
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஜூன் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிடும் போது, அதன் செயல்பாட்டு வரம்பில் 200 அடிப்படை புள்ளிகளின் தாக்கம் இருந்த நிலையிலும், ஊழியர்களின் நலனுக்காக சம்பள உயர்வை வழங்குவதாகக் கூறியது. டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்கள் நிறுவன ஊழியர்களுக்கான வருடாந்திர சம்பள உயர்வை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியுள்ளோம். இதனால் எங்களது செயல்பாட்டு வரம்பு 200 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 23.2% ஆக உள்ளது. ஊழியர்களின் மேம்பட்ட செயல்திறன் மூலம் இது வரும்காலங்களில் ஈடுசெய்யப்படும் என்று TCS CFO சமீர் செக்ஸாரியா உறுதிகூறினார்.
இழப்பை ஈடுகட்டலாம்
இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமீர் செக்சாரியா கூறுகையில், "ஊழியர்களின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் இந்த இழப்பை ஈடுகட்ட முடிவு செய்துள்ளோம். டிசிஎஸ் நிறுவனம் சமீபத்திய வருடாந்திர சம்பள உயர்வு மதிப்பாய்வு அடிப்படையில், சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு சுமார் 12-15 சதவீத சம்பள உயர்வை வழங்கியுள்ளது. தகுதி வாய்ந்தோருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது," என்றார்.
புதிய பணியமர்த்தல்கள் இருக்காது
சமீபத்திய வருடாந்திர இழப்பீட்டு மதிப்பாய்வில் டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்திறன் 12-15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதோடு நிறுவனம் இந்த ஆண்டு பெரிய எண்ணிக்கையிலான நபர்களை பணியமர்த்தாது என்றும், அதற்கு பதிலாக கடந்த ஆண்டு எடுத்த நபர்களை திறம்பட பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார். "நாங்கள் வழங்கிய அனைத்து சலுகைகளையும் மதிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், கடந்த ஆண்டு நாங்கள் உருவாக்கிய திறனை மேம்படுத்துவதில் எங்கள் கவனம் இருக்கும்" என்று நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் கூறினார்.
ஏன் இந்த நிலை?
ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கு இடையேயான மூன்று மாதங்களில் நிறுவனம் வெறும் 523 புதிய ஊழியர்களை மட்டுமே நியமித்துள்ளது. இப்போது அதன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 6.15 லட்சமாக உள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து திடீரென ஏற்பட்ட ஒப்பந்தங்களைச் சமாளிக்க முடியாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐடி நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவு பணியமர்த்தப்பட்டதன் விளைவாக இப்படி நடந்து வருகிறது. ஆனால் நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லக்காட் கூறினார்.