இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டொமினிகாவில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய களமிறங்கினாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷன் இன்று தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கின்றனர். 






யார் இந்த ஜெய்ஸ்வால்..? 


ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2023ல் விளையாடிய போட்டியின் 16வது சீசனில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்தார். 13 பந்துகளில் அரைசதம், மும்பை அணிக்கு எதிராக சதம் என மிரட்டினார். 


இதுபோக, ஜெய்ஸ்வால் இந்தியா அண்டர்-19 ஏ, இந்தியா அண்டர்-19, இந்தியா அண்டர்-23, மும்பையில் ஃபர்ஸ்ட் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடியுள்ளார். 21 வயதான ஜெய்ஸ்வால் டிசம்பர் 28, 2001 அன்று பிறந்தார். விஜய் ஹசாரே டிராபி மற்றும் இரானி கோப்பையில் இரட்டை சதம் அடித்த சாதனையை படைத்துள்ளார். மேலும், 2019 விஜய் ஹசாரே டிராபியில் 203 ரன்களும், 2022-23 இல் மத்தியப் பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா இடையேயான இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்காக விளையாடிய முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் எடுத்தார். 


இஷான் கிஷன்:


இஷான் கிஷன் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 வடிவத்தில் விளையாடியுள்ளார். அவர் இதுவரை 27 சர்வதேச டி20 போட்டிகளில் 653 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 14 ஒருநாள் போட்டிகளில் 510 ரன்கள் எடுத்துள்ளார். இப்போது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளார். இஷான் கிஷன் 82 முதல் தர இன்னிங்ஸ்களில் 2985 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 16 அரை சதங்கள் அடங்கும். மேலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 87 இன்னிங்ஸ்களில் 3059 ரன்கள் எடுத்துள்ளார்.


இந்திய அணி விளையாடும் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ்


வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடும் லெவன்: கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), டெஜெனர் சந்தர்பால், ரேமன் ரெய்பர், ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானஸ், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ரஹ்கீம் கார்ன்வால், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜோமல் வாரிக்கன்