தமிழ்நாட்டில் புகழ்பெற்ற 11 பொருட்கள் மற்றும் 22 இதர மாநில பொருட்களை சேர்த்து, ஒரே நாளில் நேற்று ( மார்ச் 31 ), 33 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கியது சாதனை என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.


புவிசார் குறியீடு என்றால் என்ன?


புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோன்றிய அல்லது அந்த இடத்தை சேர்ந்ததற்கான அடையாள குறியீடாகும். குறிப்பிட்ட இடத்தின் பண்புகளால் உருவான தரம் வாய்ந்த பொருட்களுக்கு,  புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.


இந்தியாவில் புவிசார் குறியீடானது, புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999ன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவுசார் சொத்துரிமை துறை, அதற்கான அங்கீகாரத்தை வழங்குகிறது.


புவிசார் குறியீடானது பானங்கள், கைவினைப் பொருட்கள், விவசாய பொருட்கள், தொழில்துறை பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த பொருட்கள் இயற்கையானவையாக இருக்கலாம் அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். இந்தியாவில் முதல் புவிசார் குறியீடு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டார்ஜிலிங் தேயிலைக்கு வழங்கப்பட்டது.




தமிழ்நாட்டில் மேலும் 11 புவிசார் குறியீடு:


கம்பம் பன்னீர் திராட்சை,மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், ஊட்டி வர்க்கி, மானாமதுரை மண்பாண்டம், சேலம் ஜவ்வரிசி, ஆத்தூர் வெற்றிலை, நெகமம் காட்டன் புடவை, மயிலாடி கற்சிற்பங்கள், தைக்கால் ரத்தன் கைவினை, சோழவந்தான் வெற்றிலை கொடி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதாக சென்னையில் உள்ள புவிசார் குறியீடை பதிவு செய்யும் அமைப்பு நேற்று ( மார்ச் 31 ) தெரிவித்தது.


இதையடுத்து, தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.




                     படம்: கம்பம் ( தேனி ) பன்னீர் திராட்சை


மேலும், இந்தியா முழுவதிலுமிருந்து 22 தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பகீரா பித்தளை பொருட்கள், பனாரஸ் லங்டா ஆம் (மாம்பழம்), ஜபல்பூர் கல் கைவினை மற்றும் லடாக் ஷிங்ஸ்கோஸ் (மரச் செதுக்கல்) உள்ளிட்டவைகள் அடங்கும். இதையடுத்து, இந்தியாவில் ஒரே நாளில் 33 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றது சாதனையாக பார்க்கப்படுகிறது.


புவிசார் குறியீட்டின் முக்கியத்துவம்:



  • புவிசார் குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை உறுதி செய்கிறது.

  • கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான அங்கீகாரத்தைப் பெறவும், சிறந்த வாழ்வாதாரங்களை பெறவும் புவிசார் குறியீடு உதவுகிறது.

  • தனித்துவமான உள்ளூர் தயாரிப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், சுற்றுலாப் பயணிகளை பிறப்பிடங்களை நோக்கி பார்வையிட ஈர்ப்பதன் மூலமும் சுற்றுலாவை ஊக்குவிக்கிறது.

  • இந்தியாவுக்கு தனித்துவமான தயாரிப்புகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை வழங்குகின்றன, இது உலகெங்கிலும் நாட்டின் பிராண்டிங்குக்கு பங்களிக்கிறது.

  • தயாரிப்புடன் தொடர்புடைய பாரம்பரியத்தை பாதுகாக்க உதவுகிறது, மேலும் அத்தகைய அறிவின் நன்மைகள், தலைமுறைகளாக பாதுகாத்து வரும் சமூகங்களுக்கு செல்வதை உறுதி செய்கிறது.

  • ஏற்றுமதியை ஊக்குவிக்க வழி வகுக்கிறது.


இந்நிலையில், புவிசார் குறியீடு கிடைத்திருப்பது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Also Read: Cheetah Cubs: நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலி 4 குட்டிகளை ஈன்றது...அதிகரிக்கும் எண்ணிக்கை