2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட மூன்று வயது பெண் சிறுத்தையான ’சியாயா' நான்கு குட்டிகளை ஈன்றது.


இந்தியாவில் சிவிங்கி புலிகள்:


இந்தியாவில் சிவிங்கிபுலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையிலும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி புலிகள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. அதற்காக நமீபியா அரசுடன், இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 


அதையடுத்து, நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 8 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.


அதனை தொடர்ந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அந்த சிவிங்கி புலிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய் பூங்காவில் விடப்பட்டன. இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.


இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் உள்ள சமீப தினங்களுக்கு முன்பு 'ஷாஷா' பெண் சிவிங்கிப் புலி மார்ச் 27 ஆம் தேதி இறந்தது. அந்த சிவிங்கி புலிக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை காரணமாக இறந்ததாக கூறப்பட்டது. இது, நாட்டில் உள்ள பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை 19 ஆக குறைந்தது.


4 குட்டிகள்:


இந்நிலையில், சியாயா என்ற பெண் சிவிங்கி புலியானது 4 குட்டிகளை ஈன்றது. பிறந்த குட்டிகள் கூண்டில் பாதுகாப்பாக வனத்துறையின் கண்காணிப்பில் உள்ளன.


மத்திய பிரதேச தலைமை வனப்பாதுகாவலர் ஜே.எஸ்.சவுகான் தெரிவித்துள்ளதாவது, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த மூன்று வயது பெண் சிறுத்தை 'சியாயா' ஐந்து நாட்களுக்கு முன்பு நான்கு குட்டிகளை ஈன்றது. குட்டிகள் கூண்டில் பாதுகாப்பாக உள்ளன.  தாயானது, குட்டிகளை வெளியில் கொண்டு வரும்போது, அவற்றின் பாலினம் குறித்து தெரியவரும் என தெரிவித்தார்.






இந்நிலையில் நான்கு சிவிங்கி புலி குட்டிகளின் வீடியோவை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


Also Read: Namibian Cheetah Died: நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலி உயிரிழப்பு... என்ன ஆச்சு?