ஐபிஎல் போட்டித் தொடரின் 16வது சீசன் மிகவும் பிரமாண்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேப்டன் கூல் எனப்படும் மகேந்திரசிங் தோனி தலைமையில் நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட களமிறங்கின.
இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்கள் குவிப்பதில் மிக கவனமாக இருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் மட்டும் 50 பந்துகளில் 4 பவுண்டரி 9 சிக்ஸர்கள் விளாசி 92 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, தனது அணியில் இம்பேக்ட் ப்ளேயரை இணைத்தது. பீல்டிங்கின் போது காயம்பட்ட கேன் வில்லியம்சனுக்கு பதிலாக சாய் சுதர்சனை அணிக்குள் கொண்டு வந்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இது அவருக்கு மிகவுமே பயனுள்ளதாக இருந்தது. அதேபோல், சென்னை அணியில் அம்பத்தி ராயுடுவை வெளியேற்றிவிட்டு துஷார் தேஷ்பாண்டேவை அணிக்குள் கொண்டு வந்தார்.
சென்னை அணியைப் போல் விக்கெட்டுகள் விழுந்தாலும் ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தி வந்த குஜராத் அணிக்கு நல்ல பலன் கிடைத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 30 பந்தில் அரைசதம் விளாசி சிறப்பாக விளையாட அவருக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா நன்கு ஒத்துழைத்தார். ஆனால் இந்த கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஹர்திக் பாண்டியா 13 ஓவரினை வீசிய ஜடேஜாவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சிறப்பாக விளையாடி வந்த குஜராத் அணிக்கு கடைசி 6 ஓவர்களில் 52 ரன்கள் மட்டும் தான் தேவைப்பட்டது. இந்நிலையில் 15வது ஓவரின் இறுதிப் பந்தில் இம்பேக்ட் ப்ளேயராக கொண்டுவரப்பட்ட தேஷ்பாண்டேவின் பந்தில் கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் போட்டி எப்படியும் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என நம்பிக்கையோடு இருந்த சென்னை அணிக்கு, இறுதி நான்கு ஓவர்களிலும் ஏமாற்றமே காத்து இருந்தது.
கடைசி மூன்று ஓவர்களில் குஜராத் அணிக்கு வெற்றி பெற 30 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் திவாட்டியாவும், விஜய் சங்கரும் இருக்க, சென்னை அணி 18வது ஓவரை கட்டுக்கோப்பாக விச நினைத்து ஃபீல்டிங்கை செட் செய்தாலும், சிக்ஸர் விளாசப்படடது. ஆனாலும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில், விஜய் சங்கர் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதன் பின்னர் களமிறாங்கிய ரஷித் கான் 19வது ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாச, கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஒவரை வீசிய தேஷ்பாண்டே முதல் பந்தை ஒய்டாக வீச, அடுத்த பந்து சிக்ஸருக்கு பறக்க விடப்பட்டது. இறுதியில் குஜராத் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.