இந்தியாவில் மட்டுமல்லாமது ஆசிய அளவில் இரண்டாவது பணக்காரர் கௌதம் அதானி. இவருடைய குழுமம் சார்பில் மின்சாரம், கப்பல், நிலக்கரி உள்ளிட்ட பல தொழில்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் எப்போதும் அதிகமாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும். சமீபத்தில் என்.எஸ்.டி.எல் என்ற பங்குச்சந்தை பாதுகாப்பு அமைப்பு அல்புல்லா முதலீடு நிறுவனம், கிரேஸ்டா மற்றும் ஏஎம்பிஎஸ் உள்ளிட்ட 4 நிறுவனத்தின் அந்நிய முதலீடு கணக்கை முடக்கியது. இந்த நிறுவனங்கள் சுமார் 43,500 கோடி ரூபாய மதிப்பிலான அதானி குழுமத்தின் பங்குகளை வைத்துள்ளனர். 


இந்த திடீர் நடவடிக்கையால் இன்று ஒரே நாளில் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் விலை மிகவும் அதிகமாக சரிந்துள்ளது. இந்த நான்கு நிறுவனங்களும் தங்களுடைய நிதி தொடர்பாக உரிய விவரங்களை அளிக்க தவறியதால் இந்நிறுவனங்களை பண மோசடி சட்டத்தின் கீழ் என்.எஸ்.டி.எல் முடக்கியது. இது தொடர்பான செய்தியுடன் அதானி குழுமத்தின் பங்குகளின் விலைகள் அதிகமாக உயர்ந்து வருவது தொடர்பாக பங்குச்சந்தைகள் அமைப்பான SEBI விசாரணை நடத்துவதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிய தொடங்கின. 




எனினும் இந்த தகவலை மறுத்து அதானி குழுமம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "எங்களுடைய பங்குகள் தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை. மேலும் அவற்றில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை. இது முதலீட்டார்களை திசை திருப்பி எங்களுடைய குழுமத்திற்கு நஷ்டம் ஏற்படுத்த செய்யப்பட்டது. இந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களின் டிமேட் கணக்கு முடக்கப்படவில்லை என்று நாங்கள் உறுதி செய்துள்ளோம்" எனத் தெரிவித்தது. 


பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் தரவுகளின்படி இன்று ஒரே நாளில் அதானி குழுமத்தின் பங்குகள் 1 லட்சம் கோடி அல்லது 10 சதவிகிதம் அளவிற்கு வருமானத்தை இழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு 70.8 பில்லியன் டாலர்களாகவும் குறைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. அதாவது இன்று ஒருநாளில் மட்டும் அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. 


இந்தத் திடீர் பங்குகள் சரிவு காரணமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு சில நிபுணர்கள் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர். அதன்படி அதானி குழுமத்தின் பங்குகளின் மீது முதலீடு செய்ய விரும்புவபர்கள் சற்று ஆலோசனை செய்து பொறுத்திருந்து முதலீடு செய்யவேண்டும். ஒரிரு நாட்களில் இந்த பிரச்னை தொடர்பான உரிய விவரம் வெளியான பிறகு தங்களது முதலீடுகளை செய்யலாம் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பான்-ஆதார் இணைப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா? விவரமா தெரிஞ்சுக்கோங்க!