நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தின் கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2021, அறிமுகத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ள மொத்தம் 26 மசோதாக்களில் ஒன்றாகும். கிரிப்டோ நிதியின் பரந்த வரையறைகள் குறித்த முதல் நாடாளுமன்றக் குழு விவாதத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு இது வருகிறது. அங்கு பிட்காயின்களை நிறுத்த முடியாது. ஆனால் அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 


அதன்படி தனியார் கிரிப்டோ கரன்சியை தடைசெய்யும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரிசர்வ் வங்கி சார்பில் அரசு சார்ந்த ஒரு டிஜிட்டல் கரன்சி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில் கிரிப்டோ கரன்சி முதலீடுகளுக்கு என்ன நடக்கும்? கிரிப்டோ கரன்சிகள் பரிவர்த்தனைக்கு என்ன நடக்கும்?


மத்திய அரசின் புதிய சட்டம் என்ன செய்யும்?


மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர உள்ள புதிய மசோதா சட்டமாகும் பட்சத்தில் தனியார் கிரிப்டோ கரன்சிகள் மட்டும் தடைசெய்யப்படும். அது கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையை முற்றிலும் தடை செய்யாது. ஆகவே பிட்காயின் மற்றும் எதிரியம் போன்ற பொது கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்துபவர்கள் பயப்பட தேவையில்லை. 


 


பொது vs தனியார் கிரிப்டோ கரன்சி?


மத்திய அரசின் புதிய மசோதாபடி தனியார் கிரிப்டோ கரன்சியின் விரிவாக்கம் என்ன வென்று தெளிவாக தெரியவில்லை. ஆனால் பிட்காயின், எதிரியம் போன்ற கிரிப்டோ கரன்சிகள் பொது கிரிப்டோ கரன்சியாக கருதப்படுகின்றன. ஏனென்றால் இவை அனைத்து பொது ப்ளாக் செயின் முறையை பயன்படுத்துகின்றன. இந்த முறையில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானது என்றாலும் அவற்றை அரசால் கண்டறிய முடியும். 




அதேபோல் தனியார் கிரிப்டோ கரன்சிகள் என்றால் அவை பொது ப்ளாக் செயின் முறையை பயன்படுத்தினாலும் சில கட்டுப்பாடுகள் அதில் இருக்கும். குறிப்பாக அதை ஒரு சில நபர்கள் மட்டும் பரிவர்த்தனைகளை பார்க்க முடியும். இந்த வகையான கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை அரசு கண்டறிவது மிகவும் சிக்கலான ஒன்று. மொனோரா மற்றும் டெஸ் போன்றவை தனியார் கிரிப்டோ கரன்சி வகைகளை சேர்ந்ததாகும். 


 


கிரிப்டோ கரன்சிகள் மீது முழு தடை சாத்தியமா?


கிரிப்டோ கரன்சிகள் என்பதற்கு எந்தவித பண மதிப்பும் இல்லை. அது ஒரு முதலீடு அல்லது ஒரு சொத்து போல தான். ஆகவே அதை முழுவதுமாக அரசு தடை செய்யுமா என்பது பெரிய கேள்வி தான். ஆனால் இந்த கிரிப்டோ கரன்சிகள் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் என்ற சந்தையில் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகின்றன. ஆகவே இந்த கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் சந்தையை அரசு முழுவதும் தடை செய்தால் சில சிக்கல்கள் வரும். எனினும் ஒரு கிரிப்டோ கரன்சியிலிருந்து மற்றொரு கிரிப்டோ கரன்சிக்கு மாறுவது என்பது ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு ஃபையில் மாற்றுவது போல தான். ஆகவே வாடிக்கையாளர்கள் எளிதாக தடை செய்யப்பட்ட கரன்சிகளிலிருந்து மற்ற கிரிப்டோ கரன்சிக்கு மாற முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மத்திய அரசின் முழு மசோதா வெளியான பின்பு தான் அது ஒழுங்கு முறை மற்றும் தடை தொடர்பான தெளிவான விஷயம் நமக்கு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பிட்காயின், எதிரியம், சொலானா போன்ற தனியார் கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு கடும் சரிவு..