தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாகவும், ஹோமியோபதி படித்து விட்டு அலோபதி மருத்துவமனை நடத்தி வருவதாகவும் மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவத் துறை அதிகாரிகள் நல்லம்பள்ளி பகுதியில் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்பொழுது அங்கு உள்ள அதிமுக மருத்துவமனையில் அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி என்பவர் கிளினிக்கில் திடீர் சோதனை நடத்தினர். அப்பொழுது கிருஷ்ணசாமி இடம் மருத்துவம் படித்தீர்களா? என்ன மருத்துவம் படித்துள்ளீர், இந்திய மருத்துவ கவுன்சில் பதிவு செய்துள்ளீரா என்று விசாரணை நடத்தியுள்ளனர்.

 



 

அந்த விசாரணையில் கிருஷ்ணசாமி மருத்துவம் படிக்காமல், ஹோமியோபதி படித்தவர் என தெரியவந்துள்ளது. ஆனால் கிருஷ்ணசாமி அலோபதி மருத்துவம், தான் படித்ததாகவும் அதற்கான அனைத்து சான்றிதழ்களும் இருக்கின்றன. மேலும் மருத்துவமனைக்கு உரிய அனுமதி பெற்று கிளினிக் வைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவத் துறை அதிகாரிகள் சான்றிதழ்களின் நகலை வழங்குமாறு கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சான்றிதழ்களை எடுத்து வருவதாகச் சென்ற கிருஷ்ணசாமி நீண்ட நேரமாகியும் வராமல் தலைமறைவானார். இதனையடுத்து கிருஷ்ணசாமி நடத்தி வந்த கிளினிக்கு மருத்துவத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசிகள், மருந்து, மாத்திரை, சிரஞ்சி, உள்ளிட்ட பொருட்களை மருத்துவத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவத் துறையினர் அனுப்பி வைத்தனர்.

 



 

 

மேலும் அதிமுக தருமபுரி மாவட்ட மருத்துவரணி செயலாளர் கிருஷ்ணசாமி, பி.எச்.எம்.எஸ் அரசு பதிவு பெற்ற மருத்துவர் என பெயர் பலகை வைத்து, சம்மந்தபட்ட க்ளினிக்கில் ஹோமியோபதி மருத்துவத்திற்கு பதிலா ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததால், அதிகாரிகளின் திடீர் சோதனையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கிருஷ்ணசாமியின் மீது மருத்துவத் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து அதியமான் கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான  கிருஷ்ணசாமியை தேடி வருகின்றனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் இதே போன்று பல்வேறு இடங்களில் போதிய மருத்துவப்படிப்பு இல்லாமலேயே சிறிய மருத்துவமனை, கிளினிக் போன்றவற்றை பல பேர் நடத்தி வருகின்றனர். ஆனால் மாவட்ட மருத்துவத் துறை முழுமையாக சோதனை நடத்தி தகுதி இல்லாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.