இந்தியாவின் 31 முதலமைச்சர்களில் யாருக்கு எவ்வளவு சொத்து மதிப்பு இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். 


இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின்படி, “இந்திய முதலமைச்சர்களின் சராசரி வருட வருமானம் கடந்த நிதியாண்டில் 13,64,310 ரூபாயாக இருந்துள்ளது. இது தனிநபர் வருவாயைவிட 7.3 மடங்கு அதிகம். முதலமைச்சர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1630 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 931 கோடி ஆகும். அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு ரூ. 332 கோடி சொத்துக்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 



ரூ.51 கோடி சொத்துக்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் கடைசி 3 இடங்களில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்(ரூ.1 கோடியே 18 லட்சம் ரூபாய்), ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா(55 லட்சம் ரூபாய்), மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி(15 லட்சம் ரூபாய்) ஆகியோர் உள்ளனர். இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 8 கோடியே 88 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன் 14வது இடத்தில் உள்ளார்.