தமிழ்நாட்டில் புலம் பெயந்த மக்களுக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சையளிக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்க செய்தார்.
அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறைக்கு கடந்தாண்டு ரூ.17,901 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் நடப்பாண்டு ரூ. 18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தரமான கல்வியும், மருத்துவ வசதியும் அனைத்து மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதே இந்த அரசின நோக்கமாகும் எனவும், கிண்டியில் 1000 படுக்கை வசதிகளுடன் கொண்ட கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டே திறக்கப்படும் எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மருத்துவத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:
- பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு
- புலம் பெயந்தவர்களுக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சையளிக்கப்படும்.
- 711 தொழிற்சாலைகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்
- சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவு புதிதாக தொடங்கப்படும்.
- உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் முகாம்கள் நடத்தப்படும்.
- முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 11.28 லட்சம் நோயாளிகள் நடப்பாண்டில் பயனடைந்துள்ளனர்.
- ரூ.1020 கோடி மதுரை, கோவை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டு வரும் வளாகங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
- திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டும்.
மேலும் படிக்க: தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்