தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.


அதில், தமிழ்நாடு பொருளாதார நிலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதை காண்போம். அதற்கு முன்பு பட்ஜெட் என்றால் என்ன?, நிதியாண்டு என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


பட்ஜெட் என்றால் என்ன?


பட்ஜெட் என்பது, உதாரணத்திற்கு நமது குடும்பத்தில் மாதம் ஒரு முறை திட்டமிடுவோம், எவ்வளவு வருமானம் வரும், அதை எப்படி செலவு செய்வது, செலவு செய்வதற்கு ஏற்ப வருமானம் குறைவாக இருந்தால், எவ்வளவு கடன் வாங்கலாம் என திட்டமிடுவோம்.


அதே போன்றுதான் மாநிலத்துக்கும், ஒரு ஆண்டில், மாநிலத்துக்கு எவ்வளவு வருவாய் வரும், எவ்வளவு செலவினம் வரும் திட்டமிடலாகும். 




நிதி ஆண்டு என்றால் என்ன?


சாதாரண ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முடிவடையும். ஆனால் நிதியாண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி முடிவடையும். இந்நிலையில், தற்போது 2022-23 ஆம் ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டானது 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டாகும்.


தற்போது, தமிழ்நாட்டின் வருவாய், செலவினம், கடன் மற்றும் பற்றாக்குறை குறித்தான தகவல்களை தெரிந்து கொள்வோம்.


வருவாய்:


திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், நடப்பு நிதியாண்டான 2022-23 ஆம் ஆண்டில் மொத்த வருவாயானது 2.45659 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


வரும் நிதியாண்டில் ( 2023-24 ), தமிழ்நாட்டின் மொத்த வருவாயானது ரூ.2.70515 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.




செலவினம்:


வரும் நிதியாண்டில் ( 2023-24 ), தமிழ்நாட்டின் மொத்த செலவினமானது ரூ.3.65321 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டான 2022-23-ஐ காட்டிலும் 13.7 சதவிகிதம் அதிகமாக உள்ளது.


மேலும், மூலதன செலவினம் ரூ.44,366 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


பற்றாக்குறை:


வருவாயை விட செலவினம் அதிகமாக இருக்கும் என்பதால் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதாவது 2023-24 ஆம் நிதியாண்டில் 37,540.45 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


கடன்:


வரும் நிதியாண்டில் (23-24), ரூ.1.43 லட்சம் கோடி அளவுக்கு கடன் பெற அரசு திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ரூ.51, 331 கோடி கடனை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


31.03.2024 நிலவரப்படி, தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள கடன் தொகையானது, ரூ.7.26028 லட்சம் கோடி என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read: TN Budget 2023: மக்களே உங்களுக்காக... தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு இதுதான்!


Also Read:1,000.ரூ மகளிர் உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடையாது? தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?