பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று தாக்கல் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இன்ப அதிர்ச்சி தந்த நிதி அமைச்சர்:


குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.


திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.  ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், அதற்கான அறிவிப்பு வராமல் இருந்தது.


இதனை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், கடந்த மாதம் ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்த பட்ஜெட் தாக்கலில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார்.


“குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு பட்ஜெட் தாக்கலில் இடம்பெறும்” என்று உறுதியளித்தார். 


இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இந்த உரிமைத் தொகை யாருக்கு எல்லாம் வழங்கப்படும் என்பதில் தொடர் குழப்பம் நீடித்து வந்தது. அதற்கும் விளக்கம் அளித்து முற்றிப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


யாருக்கெல்லாம் கிடையாது?


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மாநில சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அளித்த பேட்டியில், "மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோர் பயன்பெற வாய்ப்பில்லை" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 மாதந்தோறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் பலன் அடைய வாய்ப்பு உள்ளது.


இந்த நிதியாண்டில் 6 மாதமே உள்ளதால் திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  உரிமைத் தொகை மகளிரின் வங்கி கணக்கில் நேரபடியாக செலுத்தப்படும். உரிமைத்தொகை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.


பிற முக்கிய அறிவிப்புகள்:


இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முக்கியமாக தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 20 புதிய நாட்டுபுற கலை பயிற்சி மையம் அமைக்கப்படும், இலங்கை தமிழர்களுக்கு ரூபாய் 223 கோடி மதிப்பில் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு, ராணுவ வீரர்கள் மரணத்திற்கான நிதி 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரிப்பு, சென்னை சங்கமம் கலை விழா மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும், மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரும் ஜூன் மாதம் திறந்து வைக்கப்படும், நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் மேம்பாட்டிற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி நிதி ஒதுக்கீடு, தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு கருவிகள் வாங்க நிதி வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.