இந்தியாவின் 2022-2023ம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது.


இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையை பேசினார். அப்போது, நாட்டின் கல்வித் திட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசும்போது, திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். அவர் திருவள்ளுவர் எழுதிய “ கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற கல்வியின் சிறப்பை எடுத்துக்காட்டும் இந்த குறளை நாடாளுமன்றத்தில் உதாரணமாக கூறினார். பிரதமர் மோடியும் தான் பங்கேற்கும் கூட்டங்கள் பலவற்றிலும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதை உதாரணமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடருக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கத் தயார் என்று கூறினார். கடந்தாண்டு கடுமையான கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால்  இந்த கூட்டத்தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


முன்னதாக, இன்று காலை தொடங்கிய கூட்டத்தொடரில் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மீது உரிய நடவடிக்கையை தமிழக ஆளுநர் எடுக்க வேண்டும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் உரையை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.




கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை காரணமாக கொரோனா கட்டுப்பாடுகள் நாடாளுமன்றத்தில் முறையாக கடைபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட உள்ளது.


மேலும் படிக்க : President Speech Highlights: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையின் சிறப்பம்சங்கள்...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண