கடந்த இரண்டு பெருந்தொற்று ஆண்டுகளும் நாட்டு மக்களை பெரிதும் பாதித்து என்றால் அதில் விவசாயிகளை அது கூடுதலாகவே பாடாய்படுத்தியது எனலாம். விவசாயச் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான போராட்டம் லாக்டவுன் காலத்திலும் எப்படியோ  முட்டிமோதிப் போராடி நடைபெற்றது. அவர்களின் மனம் தளராத போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பிரதமர் மோடி விவசாயச் சட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தது பார்க்கப்படுகிறது. 


இதற்கிடையேதான் தற்போது 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிக்களுக்கு பாதுகாப்பான வகையிலும் விவசாயத்துறைக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் வகையிலும் பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




 மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துறை எதிர்பார்ப்பது என்ன என்பதை நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம்.
வெதர் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (WRMS) நிறுவனர் அனுஜ் கும்பத் கூறுகையில், “இந்தியாவில் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் இருப்பதால், மத்திய பட்ஜெட்டில் இந்தத் துறை எப்போதும் முக்கிய கவனத்தை ஈர்க்கிறது. கொரோனா தொற்றுநோயின் மற்றொரு அலையைச் சமாளிக்க நாடு சாத்தியப்படும் அனைத்து வழிகளையும் செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளுக்கு பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் பட்ஜெட்டில் கணிசமான தொகையை அரசு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்


மேலும், “கொரோனா நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஒரு பூஸ்டர் டோஸாக அமைந்துள்ளது. விவசாயத்தில் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்மார்ட் அணுகுமுறைகளைப் பற்றி விவசாயிகள் அறிந்துகொள்ள உதவும் கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும்.டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகரிக்க விளம்பரப்படுத்தப்பட்ட  "டிஜிட்டல் இந்தியா" வின் ஒரு பகுதியாக இதனைச் செய்யலாம்” எனக் கூறினார்.


மற்றொரு பக்கம் விவசாயத்திற்கு உதவும் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை செயல்படுத்த அரசு அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். ரிமோட் சென்சிங் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக, பயிர் மகசூல் மதிப்பீடு மற்றும் பயிர் உரிமைகோரல் மேலாண்மைக்காக, மற்றும் மாநில விவசாய தொழில்நுட்ப பிரிவுகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 31 ஜனவரி தொடங்கி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு கேள்வி நேரம் இருக்காது என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. 31 ஜனவரி அன்று தொடங்க இருக்கும் நாடாளுமன்றத்தின் 8வது கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். அடுத்த தினமான 1 பிப்ரவரி அன்று நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமன் தனது பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். பட்ஜெட் குறித்த நிதியமைச்சரின் உரை 11 மணிக்குத் தொடங்கி சுமார் 1.5 முதல் 2 மணிநேரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது