நாடு முழுவதும் இந்த ஜூலை மாதத்தில் விடுமுறை தினங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக வங்கிகளுக்கான விடுமுறை இந்த மாதம் மாநில விடுமுறை, தேசிய விடுமுறை என சேர்த்து 15 நாட்களாக உள்ளது. ஜூலை மாதத்திற்காக வங்கிகள் செயல்படும் தினம் மற்றும் விடுமுறை தினத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, 9 நாட்கள் மாநில விடுமுறையின் கீழ் வருகிறது. 6 நாட்கள் வார விடுமுறையாக அமைந்துள்ளது.


இதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமையான நாளை வார விடுமுறை ஆகும். வரும் 10-ந் தேதி மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை அரசின் வார விடுமுறை ஆகும். 11-ந் தேதி வார ஞாயிற்றுக்கிழமை என்பதால் வார விடுமுறை ஆகும். 12-ந் தேதி திங்கள்கிழமையன்று புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தினம் என்பதால் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் ஆகிய மாநிலங்களில் மாநில விடுப்பின் கீழ் விடுமுறை அளிக்கப்படுகிறது.




சிக்கிம் மாநிலத்தில் உள்ள கேங்டாக்கில் பானு ஜெயந்தி வரும் 13-ந் தேதி கொண்டாடப்படுவதால், அந்த மாநிலத்தில் மாநில விடுமுறையின் கீழ் அன்றைய தினம் வங்கிகள் செயல்படாது. கேங்க்டாக்கில் 14-ந் தேதியான புதன்கிழமை த்ருக்பா சேச்சி தினம் என்பதால் அன்றைய தினமும் மாநில விடுமுறையின் கீழ் அந்த மாநிலத்தில் வங்கிகள் செயல்படாது.


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் ஹரிலா பூஜை வரும் 16-ந் தேதியான வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் மாநில விடுமுறையின் கீழ் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17-ந் தேதி மேகலாயாவைச் சேர்ந்த முதல் சுதந்திர வீரர் திரோத்சிங் நினைவு நாளை முன்னிட்டு அந்த மாநிலத்தில் மாநில விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அன்றைய தினம் அங்கு வங்கிகள் செயல்படாது. திரிபுரா வில் கர்ஜி பூஜை தினம் என்பதால் அன்றைய தினம் மாநில விடுமுறையின் கீழ் அங்கு வங்கிககள் செயல்படாது.


18-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது 19-ந் தேதி புத்த பண்டிகையான குரு ரின்போச் ட்ரங்கர் சேசு பிறந்த தினம் சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் கொண்டாடப்படுவதால் மாநில விடுமுறையின் கீழ் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




20-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று ஜம்மு, ஸ்ரீநகர், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் பக்ரீத் பண்டிகை என்பதால் அங்கு மட்டும் மாநில விடுமுறையின் கீழ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 21-ந் தேதி நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படு உள்ளதால், முதல் நாள் பக்ரீத் பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்பட்ட ஜம்மு, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், கொச்சி தவிர நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


24-ந் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் வார விடுமுறை ஆகும். 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வார விடுமுறை நாடு முழுவதும் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாதத்தின் இறுதிநாளான ஜூலை 31-ந் தேதி சனிக்கிழமையன்று கெர் பூஜை திரிபுராவில் கொண்டாடப்படுவதால் அங்கு மாநில விடுமுறையின் கீழ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது